150 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல்!!
150 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல்!!
திருச்சி அருகே 150 கிலோ கெட்டுப்போன ஆட்டு இறைச்சியை சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழந்த சம்பவம் தமிழகத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளின் ஆய்வு தொடர்ந்து சூடுபிடித்துள்ளது.அந்த வகையில், திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் நகராட்சி சுகாதார அதிகாரி மூர்த்தி, உணவு பாதுகாப்பு அதிகாரி ரங்கநாதன் ஆகியோர் நேற்று நடத்திய திடீர் சோதனையில் சிக்கம் பிள்ளையார் கோவில் தெரு அருகில் உள்ள காந்தி ரோட்டில் சுரேஷ் என்பவர் குளிர்சாதனப் பெட்டியில் கெட்டுப்போன இறைச்சிகள் அடிக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சுமார் 150 கிலோ எடையுள்ள கெட்டுப் போன ஆட்டு இறைச்சியை பறிமுதல் செய்து அவற்றை அழித்தனர். மேலும் கடை உரிமையாளர் சுரேசுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது . மேலும் விசாரணையில் இவரிடம் இருந்து துறையூர் நகரில் உள்ள பல அசைவ உணவகங்களுக்கு இறைச்சி விற்பனை செய்து வருவதாகத் தெரிய வருகிறது. கெட்டுப்போன ஆட்டிறைச்சியை அதிக அளவில் பறிமுதல் செய்துள்ளதால், துறையூர் நகரிலுள்ள அசைவப் பிறியர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.
இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படும். கெட்டுப்போன, தரமற்ற இறைச்சிகளை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.