பல லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார்.
கண்டமனூர் அருகே லாரியில் தனி அறை அமைத்து பல லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் மூன்று பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மூன்று பேரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் கண்டமனூரில் நேற்று கண்டமனூர் காவல் நிலையம் எஸ் ஐ பிரேம் ஆனந்த் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஒரு லாரி நிற்காமல் அதிவேகமாக சென்றது.
இதையடுத்து அசுர வேகத்தில் சென்ற லாரியை எஸ்ஐ பிரேம் ஆனந்த் டூவீலரில் 15 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று ஜி.உசிலம்பட்டி அருகே மடக்கி பிடித்தார். ஆனால் டிரைவர் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து சோதனை செய்ததில், லாரியில் தனி அறை வைத்து பான் மசாலா, குட்கா புகையிலை போன்ற சுமார் 15 லட்சம் மதிப்பிலான பொருட்களை கடத்திக் கொண்டு வரப்பட்டது தெரிய வந்துள்ளது.
பின்னர் இது தொடர்பாக ஆய்வாளர் சத்தியபாமா தலைமையில் எஸ்ஐ பிரேம் ஆனந்த் எஸ்பி.தனிப் பிரிவு காவலர் ராஜசேகர் குற்றப்பிரிவு எஸ் எஸ் ஐ துரைராஜ் அசோக்குமார் கொண்ட போலீசார் மூன்று பேரை பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், அமச்சியாபுரத்தைச் சேர்ந்த அமைதி ஸ்வரன் மகன் விஜய் பிரபாகரன் (27), அதே பகுதியைச் சேர்ந்த திரு குமார் மகன் அஜித் (26), அல்லிநகரத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் ஆனந்த் பாபு (26)
ஆகியோர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் இது தொடர்பாக லாரி உரிமையாளர் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து தலை மறைவாக உள்ளவர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.