BREAKING NEWS

55,445 டன் மலேசிய மணல் தேங்கியிருக்கும் மணலை விற்று நிதி இழப்பை சரி செய்யுமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு.

55,445 டன் மலேசிய மணல் தேங்கியிருக்கும்  மணலை விற்று நிதி இழப்பை சரி செய்யுமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு.

தூத்துக்குடி துறைமுகத்தில் தேங்கியிருக்கும் 54,445 டன் மலேசிய மணலால் ஏற்படும் இழப்பைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு மணல் குவாரிகள் அமைக்க மற்றும் ஆற்று மணல் அள்ளி விற்பனை செய்ய நீதிமன்றம் தடை விதித்து இருந்தது. இதனால் கட்டுமான பணிகளுக்கான மணல் இல்லாமல் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. கட்டுமான பணிகள் பாதிப்பிற்கு உள்ளாகியது.

 

இந்த நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் மலேசியாவில் இருந்து 55,445 டன் மணலை கப்பல் மூலம் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்துக்கு கொண்டு வந்தது. இதற்காக அந்த நிறுவனம் ரூ.7,75,54,813 மதிப்புள்ள மணலுக்கு, ரூ.2.88 கோடி சுங்க வரி, ரூ.38.40 லட்சம் ஜி.எஸ்.டி வரியும் செலுத்தி இருந்தது.

 

 

தொடர்ந்து இந்த மணலை கட்டுமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவற்றை விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்தது. ஆனால், அப்போதைய அதிமுக அரசு சார்பில் தனியார் அமைப்புகள் நேரடியாக மணல் விற்பனை செய்ய தடை விதித்தது.

 

அது மட்டுமின்றி மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தும் என்று அரசாணை வெளியிட்டது. இதனை எதிர்த்து மணல் இறக்குமதி செய்த தனியார் நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு அந்த மணலுக்காக ரூ 12 கோடியை தனியார் நிறுவனத்துக்கு நீதிமன்றம் மூலம் வழங்கியது.

இதனை தொடர்ந்து அரசே மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி தமிழக அரசு, தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனை செய்ய ஏற்பாடுகளை செய்தது.

 

தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணல் விற்பனைக்காக முன்பதிவு, 2018-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந் தேதி தொடங்கப்பட்டது. இந்த மணலுக்காக, TNsand இணையதளத்திலும், செல்போன் செயலி மூலமாகவும் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவித்தது.

துறைமுகத்தில் முதல்கட்டமாக 11 ஆயிரம் யூனிட் மட்டுமே வழங்கப்பட உள்ளது. முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். முன்பதிவு செய்பவர்களுக்கு அடுத்த வாரத்தில் இருந்து மணல் வழங்கப்படும். TNsand இணையதளத்தில் பதிவு செய்யாத வாகனங்களுக்கும் மணல் வழங்கப்படும் எனவும் விளம்பரப்படுத்தப்பட்டது.

 

 

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஒரு யூனிட் (சுமார் 4.5 டன்) மணல் விலை ரூ.9,990 ஆகும். மேலும், 2 யூனிட் – ரூ.19,980; 3 யூனிட் – ரூ.29,970; 4 யூனிட் – ரூ.39,960, 5 யூனிட் – ரூ.49,950 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்று அறிவித்தது.  இதனை தொடர்ந்து மலேசியா மணல் விற்பனை தொடங்கப்பட்டது. ஒரு சிலர் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்ட மணலை வாங்கி சென்றனர்.

 

ஆனால் பலர் இந்த மணலை வாங்க ஆர்வம் காட்டவில்லை. இந்த மணலுக்கு அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டதும் தமிழக ஆறுகளில். எடுக்கப்டும் மணல் போல இது இல்லை எனவும் கட்டிட தொழிலுக்கு இந்த மணல் ஏற்றவையாக இல்லை என்ற பரவலான பேச்சு போன்ற காரணங்களாலும் கட்டிட வல்லுனர்கள் இதில் அதிக ஆர்வம் காட்டவில்லை.

 

இந்த நிலையில் எம்.சாண்ட் விற்பனையும் அதிகரிக்கப்பட்டது. அரசு கட்டிடங்கள் அனைத்தும் எம்.சாண்ட் கொண்டு கட்டப்பட்டன. இதனால் இறக்குமதி செய்யப்பட்ட மலேசியா மணலின் மீது இருந்த கட்டிட வல்லுனைகளின் பார்வை எம்.சாண்ட் பக்கம் திரும்பியது. இதனால் மலேசியா மணல் பாராமுகமாகி விட்டது.

 

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் அருகே 3 ஆண்டுகளாக மலைபோல் குவித்து வைக்கப்பட்டு உள்ள மணல் விற்பனையாகாமல் தேங்கி உள்ளது. மழை வெயில் காரணமாக அதில் செடி, கொடிகளால் சூழப்பட்டு கிடக்கிறது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக மணல் வைக்கப்பட்டதால் அதற்கு அரசு சார்பில் ரூ.70 லட்சம் துறைமுகத்துக்கு வாடகை கட்டணமாக தர வேண்டியுள்ளது.

 

இந்த நிலையில் முந்தைய அதிமுக ஆட்சியினரின் தவறான முடிவால் மணல் விற்பனை ஆகாத நிலையிலும், வாடகை கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளதால் இதனால் அரசுக்கு அதிகமான நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

 

எனவே இந்த மணல் கட்டிட தொழிலுக்கு ஏற்றது தான் என்ற அரசின் அனைத்து பரிசோதனைகளையும் செய்து விற்பனை செய்து மணலை அந்த இடத்தை விட்டு அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதனால் தமிழக அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பு முற்றிலும் தடுக்கப்படும் எனப்படும் பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )