அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு தலைவாழை இலையுடன் கறி விருந்து:
இந்த ஆண்டின் கடைசி வேலை நாளான இன்று தங்கள் பள்ளி மாணவர்களுக்கு கறி விருந்து.
இந்த ஆண்டின் கடைசி வேலை நாளான இன்று தங்கள் பள்ளி மாணவர்களுக்கு கறி விருந்து படைத்திருக்கிறது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்று.
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை நாளை மே 14 முதல் தொடங்குகிறது. ஒரு மாத விடுமுறைக்கு பிறகு மீண்டும் ஜூன் 12-ம் தேதி பள்ளி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் கடைசி வேலை நாளான இன்று திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியம் பாலையக்கோட்டையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவாக கறி விருந்து வழங்கப்பட்டிருக்கிறது.
பாலையக்கோட்டை அரசு தொடக்கப் பள்ளியில் மொத்தம் 108 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இன்று இறுதி தேர்வு நடைபெற்றது. தேர்வுக்கு வருகிறவர்கள் மதிய உணவு சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும் என்று நேற்றே மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி அனைத்து மாணவர்களும் இன்று காலையில் தேர்வு எழுதினர். அதன்பிறகு அவர்கள் அனைவருக்கும் தலைவாழை இலை போடப்பட்டு மதிய உணவு கறி விருந்து பரிமாறப்பட்டது.
மாணவர்களுக்கு இனிப்பு பிடிக்குமே என்ற வகையில் கறி விருந்துடன் அப்பளமும், பாயாசமும் கூட சேர்த்து பரிமாறப்பட்டது. இதனையடுத்து மாணவர்கள் முதல் நாள் எப்படி மகிழ்ச்சியோடு பள்ளிக்கு வந்தார்களோ, அதே போல இறுதி வேலை நாளான இன்று பள்ளியில் இருந்து மகிழ்ச்சியோடு வீட்டுக்கு திரும்பினர்.
இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோன்ஸ் ஐன்ஸ்னிடம் பேசினேன். “கரோனா பெருந்தொற்றால் கடந்த இரண்டு வருடங்களாக தேர்வுகள் இல்லாத நிலையில், இந்த ஆண்டு இறுதித் தேர்வு நடந்துள்ளது. மாணவர்கள் உற்சாகத்துடனே எதிர் கொண்டனர். மாணவர்களை எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த கல்வி ஆண்டில் முதல் நாளில் பூங்கொத்து, இனிப்புகள் வழங்கி உற்சாகமாக வரவேற்றோமோ அதே போல் பள்ளி இறுதி நாளில் மாணவர்களுக்கு கறி விருந்து வைத்து அவர்களுக்கு விடை தர வேண்டும் என்று எண்ணினேன்.
அதற்கு அனைத்து ஆசிரியர்களும் பெற்றோர்களும் மகிழ்ச்சியோடு இசைவு தந்தனர். அதனையடுத்து இந்த கறி விருந்து நடத்தப்பட்டது. இது மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களான எங்களுக்குமே மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் அளித்துள்ளது” என்றார்.
தங்கள் பள்ளி மாணவர்களுக்கு, கல்வி ஆண்டு இறுதி நாளில் கறி விருந்து வைத்து தங்களின் பேரன்பை வெளிக்காட்டிய பள்ளி ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.