தஞ்சாவூர் 24 மணி நேரமும் ஆக்ஜிசன் செறிவூட்டியால் உயிர் வாழும் இளம்பெண்
தஞ்சாவூர் அருகே கண்டிதம்பட்டில் ஓராண்டு காலமாக 24 மணி நேரமும் ஆக்ஜிசன் செறிவூட்டியால் உயிர் வாழும் இளம்பெண்.
தஞ்சாவூர் அருகே கண்டிதம்பட்டில் ஓராண்டு காலமாக 24 மணி நேரமும் ஆக்ஜிசன் செறிவூட்டியால் உயிர் வாழும் இளம்பெண் உரிய மருத்துவ உதவி செய்ய உறவினர்கள் கோரிக்கை.
தஞ்சாவூர் அருகே கண்டிதம்பட்டு கிராமத்தில் நுரையீறல் கோளாறு பிரச்சினையால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு தினமும் ரூ.1500 செலவு செய்து ஆக்ஜிசன் மூலம் சுவாசிக்க உதவி செய்து வருகின்றனர் உறவினர்கள்.
தஞ்சாவூர் அருகே கண்டிதம்பட்டு மேலத்தெருவைச் சேர்ந்தவர் சுவேதா(19). இவர் தன்னுடைய பெரியப்பா கூத்தபெருமாள் வீட்டில் தங்கி படித்து வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு ப்ளஸ் 2 படிப்பை முடித்த இவர், கல்லூரியில் படிக்க முயற்சி செய்தார். அப்போது உடல்நிலை சரியில்லாமல் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதுகு தண்டு வடம் வளைந்ததால், நுரையீறல் சுருங்கி விட்டதாகவும், இனிமேல் மூச்சுத்தினறல் அதிகம் இருக்கும், எனவே அவருக்கு 24 மணி நேரமும் ஆக்சிஜன் வழங்க வேண்டும் என மருத்துவர்கள் கூறினர்.
இதையடுத்து அந்த இளம்பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்த உறவினர்கள். வீட்டிலிருந்தபடியே அவருக்கு ஆக்ஜிசன் செறிவூட்டியை தினமும் ரூ.1500 செலவு செய்து, வாடகைக்கு எடுத்து அந்த இளம் பெண் சுவாசிக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து சுவேதாவின் உறவினர் சுதா, பிரதீபா ஆகியோர் கூறுகையில்: சுவேதா ஒரு வயது குழந்தையாக இருக்கும் போது, தாய் – தந்தை இருவரும் இறந்துவிட்டனர். இதனால் சுவேதாவை அவரது பெரியப்பா கூத்தபெருமாள் இங்கு கொண்டு வந்து வளர்த்தார்.
ப்ளஸ் டூ வரை தஞ்சாவூரில் உள்ள தூய வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து முடித்தார். கல்லூரி படிப்பை தொடங்க இருந்த நேரத்தில், அவருக்கு உடல் நிலை சரியில்லை என மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சுவேதாவுக்கு நுரையீறல் சுருங்கி விட்டதாகவும், இனி சுவாசிக்க வேண்டுமானால் ஆக்ஜிசன் மூலம் தான் சுவாசிக்க முடியும் என கூறிவிட்டனர்.
பின்னர் நாங்கள் வீட்டுக்கு அழைத்து வந்து, ரூ.30 ஆயிரம் முன்பணம் செலுத்தி ஆக்ஜிசன் செறிவூட்டி இயந்திரத்தை தினசரி வாடகைக்கு அமர்த்தி சுவேதாவுக்கு கொடுத்து வருகிறோம். 24 மணி நேரமும் இந்த ஆக்ஜிசன் மூலம் தான் அவர் மூச்சு விடுகிறார். ஆக்ஜிசன் இல்லையென்றால் அவர் பெரும் சிரமப்படுகிறார். இதனால் அவர் நடக்க கூட முடியவில்லை.
நாங்கள் விவசாயம் செய்து வருவதால், பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளோம். ஓராண்டு காலம் நாங்கள் வெளியில் பல இடங்களில் வட்டிக்கும், தெரிந்தவர்களிடமும் கடன் வாங்கி இந்த இளம்பெண்ணை காப்பாற்றி வருகிறோம்.
அப்பெண்ணின் உடலில் என்ன குறைபாடு உள்ளது என்பதை கண்டறிந்து, அதற்குரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களும், மாவட்ட ஆட்சியரும் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றனர்.
இதுகுறித்து இளம்பெண் சுவேதா கூறியதாவது: நான் பத்தாம் வகுப்பில் 350 மதிப்பெண் எடுத்தேன். ப்ளஸ் 2 தேர்வு கரோனாவால் நடைபெறவில்லை. எனவே தேர்ச்சி பெற்று கல்லூரிக்கு சேர விண்ணப்பங்களை வாங்கிய நிலையில் எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது, கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக நான் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு வருகிறேன். ஆக்ஜிசன் செறிவூட்டி இயந்திரம் உதவியோடு நான் சுவாசித்து வருகிறேன். எனக்கு தாய்- தந்தை இல்லை. என்னை எனது பெரியப்பா குடும்பத்தினர் தான் வளர்த்து வருகின்றனர். என்னால் அவர்கள் பல கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.
என்னை புதுச்சேரியில் உள்ள ஜிம்பர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க கூட போதிய பணவசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகமும், தொண்டுள்ளம் படைத்தவர்களும் எனக்கு உரிய சிகிச்சை அளிக்க முன் வர வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
சுவேதா குறித்து தொடர்பு கொள்ள விரும்புவோர் 9159718098 (உறவினர் சுதாகர்).
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.