BREAKING NEWS

மாற்றுத்திறனாளி முதியவர் படுகொலைக்கு ஜவாஹிருல்லா கண்டனம்.

மாற்றுத்திறனாளி முதியவர் படுகொலைக்கு ஜவாஹிருல்லா கண்டனம்.

‘இது வெறுப்பு அரசியலின் வெளிப்பாடு!’

முஸ்லிம் என்று எண்ணி இந்து மாற்றுத் திறனாளி முதியவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது பாஜக வெறுப்பு அரசியலின் கொடூர வெளிப்பாடு என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மத்திய பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் இடத்தில் மாற்றுத்திறனாளியான பன்வாரிலால் ஜெயின் என்பவரை, ‘நீ முகமது தானே. உன் ஆதார் அட்டையைக் காட்டு’ என்று சொல்லி பாஜகவைச் சேர்ந்த தினேஷ் குஷ்வாஹா என்பவர், சரமாரியாகத் தாக்கி படுகொலை செய்த பயங்கரவாதச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்’ என்று ஜவாஹிருல்லா தெரிவித்திருக்கிறார்.

மேலும், ‘மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டி, நாட்டை இவ்வளவு மோசமான நிலைக்கு பாஜக கொண்டு வந்துள்ளது. முஸ்லிம் என்று நினைத்து இந்து முதியவரைத் தாக்கிக்கொன்று அழிக்கும் மிருகத்தனமான மனநிலையைத் தனது கட்சித் தொண்டர்களிடம் வீரியமாக வளர்த்தெடுத்து தற்போது இந்துக்களையே கொன்று ஒழித்து அறுவடை செய்துகொண்டிருக்கிறது பாஜக.

வட இந்திய ஊடகங்கள், முஸ்லிம் என்று நினைத்து இந்துவைத் தவறுதலாகக் கொன்றுவிட்டதாகத் தலைப்பிட்டு பரிதாபப்படுகின்றன. கொல்லப்பட்டது ஒரு மனிதனின் உயிர் என்கிற நிலையைக் கடந்து மத ரீதியாகப் பார்க்கும் வெறுப்பு அரசியல் அடிமட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை பாஜக மற்றும் சங் அமைப்புகளிடையே ஊறிப்போய் கிடப்பதையே இது காட்டுகிறது.

இந்தியத் திருநாட்டில் சிறுபான்மையின மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடத்தப்படும் மனித உரிமை மீறல்களுக்கு ஒரு சிறிய சான்று இந்தச் சம்பவம். மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பன்வாரிலால் ஜெயின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் பாஜகவினரின் வெறுப்பு அரசியலுக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று அந்த அறிக்கையில் ஜவாஹிருல்லா கூறியிருக்கிறார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )