அண்ணல் நபிகளார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்தோரை யு.ஏ.பி.ஏ. சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.
மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
டைம்ஸ் நவ் தொலைக்காட்சி விவாதத்தில் அகிலத்திற்கோர் அருட்கொடை அண்ணல் நபிகளார் குறித்து கீழ்த்தரமான அவதூறு பரப்புரை செய்த பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை அக்கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக அக்கட்சி இடைநீக்கம் செய்துள்ளது. இதைபோன்று தன்னுடைய டிவிட்டர் பதிவில் நபிகளாரை குறித்து அவதூறு பரப்புரை செய்த பாஜக டெல்லி ஊடக பிரிவைச் சேர்ந்த நவீன் ஜின்டால் மீதும் இதே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கான்பூரில் இந்த அவதூறு பரப்புரைக்கு எதிராக அமைதியாகப் போராடிக் கொண்டிருந்தவர்கள் மீது வன்முறையை ஏவிவிட்டு அங்கு பெரும் கலவரம் உருவாவதற்கு பாஜக காரணமாக இருந்தது.- இதன் எதிரொலியாக சில அரபு நாடுகள் தங்களுடைய கண்டனத்தைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, பாஜகவின் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் செயலாளர் அருண் சிங் வழியாக, நுபுர் சர்மாவும், நவீன் ஜின்டாலும், தற்காலிகமாக நீக்கம் செய்ததாக பாஜக அறிவித்திருந்தது.
டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் நுபுர் சர்மா விசமத்தனமான கருத்தை கடந்த மே 27 அன்று வெளிப்படுத்திப் பல நாட்கள் சென்ற பிறகும் பாஜகவின் மூத்த தலைவர்கள் யாரும் அது குறித்து எவ்வித எதிர்ப்பையும் வெளிப்படுத்தவில்லை. ஒமான் நாட்டின் தலைமை மார்க்க அறிஞர் அஹ்மது பின் ஹம்மாது அல் கலிலி பாஜக நிர்வாகிகளின் விஷம கருத்துகளை மிக வன்மையாகக் கண்டித்ததைத் தொடர்ந்து கத்தார், குவைத், சவூதி அரேபியா, ஈரான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள் தங்கள் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தின.
இதனை தொடர்ந்து பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த நாடு, அனைத்து மதத்தினரையும் நேசிக்கும் நாடு என்றும், பாரதிய ஜனதா கட்சி அனைத்து மதங்களையும் மதிக்கிறது, எந்த மதத்தினரையும் இழிவுபடுத்துவதைப் பாரதிய ஜனதா கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது, எந்த ஒரு மதத்தினரையும் இழிவுபடுத்துவதைப் பா.ஜ.க.விரும்பவில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளது. அண்ணல் நபிகளாரை பின்பற்றும் முஸ்லிம்கள் குறித்து மிக மோசமான வெறுப்பு பரப்புரையைப் பிரதமர் மோடி உள்ளிட்ட பல பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்பை சேர்ந்தவர்கள் பேசிவந்துள்ள நிலையில் புதிய ஞானதோயமாக வெளிவந்துள்ள இந்த அறிக்கையை வரவேற்கின்றோம். ஒவ்வொரு நாளும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாஜகவின் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கோட்பாடுகளுக்கு விரோதமாகச் சிறுபான்மை முஸ்லிம், கிறிஸ்துவர்கள், தலித்துகள் மீது வெறுப்புணர்வு பேச்சுகளும், வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. பாஜகவிற்குப் பிறந்துள்ள இந்த புதிய ஞானோதயத்தின் காரணமாக அவை தொடருமா என்பதைப் பொறுத்தே பாஜகவின் இந்த அறிக்கை எந்த அளவிற்கு உண்மையானது என்பதைப் புரிந்துக்கொள்ள முடியும்.
நபிகளார் குறித்த அவதூறுக்கு எதிராக தான் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் நுபுல் சர்மா மற்றும் நவீன் ஜிந்தாலைல தற்காலிகாமாக நீக்கம் செய்தது மட்டும் போதாது, மக்களைப் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டக்கூடிய வகையில் பரப்புரை செய்ததற்காகப் பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்புச் (யுஏபிஏ) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உடனடியாகக் கைது செய்வதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் யு ஏ பி ஏ சட்டத்தையே ரத்து செய்யவேண்டும். அச்சட்டத்தை முஸ்லிம்களைப் பழிவாங்க மட்டுமே ஒன்றிய பா ஜ க அரசு பயன்படுத்திவருவதை உலகம் உற்றுக் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது..
நுபுர் சர்மா,
நவீன் ஜின்டால் இவர்களுடைய நடவடிக்கையைப் பற்றி வெளி விவகாரத்துறை செய்துள்ள ஒரு அறிவிப்பில் உதிரிப் பேர்வழிகள் (Fringe Elements) என்று அறிவித்துள்ளது. கால சக்கரம் சுழல்கிறது சி.ஏ.ஏ. சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களை உதிரிக் குழுக்கள் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டார். இன்று பாஜகவின் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் வெளிவிவாகாரத்துறை பாஜக செய்தித் தொடர்பாளரையும், அதன் ஒரு முக்கிய நிர்வாகியுமே உதிரிப் பேர்வழிகள் என்று பேசக்கூடிய நிலை வந்துள்ளது.
வெறுப்புணர்வை முதலீடாக வைத்து செயல்படக்கூடியவர்கள் அதனுடைய பலனை அனுபவித்தே தீர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.