BREAKING NEWS

பெண்ணை அறையில் பூட்டி 35 சவரன் நகை கொள்ளை

பெண்ணை அறையில் பூட்டி 35 சவரன் நகை கொள்ளை

பட்டப்பகலில் வீட்டிற்கு வந்த பெண் ஒருவர் அங்கிருந்த பெண்களை சாமர்த்தியமாக ஏமாற்றி, வீட்டில் இருந்த நகைகளைத் திருடிச் சென்று இருப்பது திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் கூட்டுறவு நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மனைவி விஜயகுமாரி (79). இவரது கணவர் பல வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மகன் ஸ்ரீதர் சேலத்தில் நகைக்கடை வைத்துள்ளார். அதனால் மகள் ராணியுடன் துறையூரில் விஜயகுமாரி தனியே வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மதியம் 4 மணி அளவில் இவரது வீட்டிற்கு 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்திருக்கிறார். தனக்கு இந்த பகுதியில் வீடு வாடகைக்கு வேண்டும் உங்களுக்கு தெரிந்த வீடு ஏதாவது இருக்கிறதா என்று பேச்சு கொடுத்திருக்கிறார். அதனால் உள்ளே அழைத்து அவரிடம் விஜயகுமாரி பேசிக் கொண்டிருந்தார்.

மகள் ராணி வெளியில் வந்து விவரம் கேட்டு விட்டு சமையலறைக்குச் சென்று விட்டார். இந்த நிலையில் விஜயகுமாரிக்கு அலைபேசி அழைப்பு வந்திருக்கிறது. அதனை எடுத்துக் கொண்டு அவர் தனது அறைக்கு சென்று அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த அறையின் கதவை திடீரென சாத்தி தாளிட்ட அந்த பெண், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த வீட்டிலிருந்து நகைகளைத் திருடிச் சென்று விட்டார்.

சிறிது நேரம் கழித்து ராணி சமையல் அறையில் இருந்து வந்து பார்த்தபோது விஜயகுமாரியின் அறை வெளிப்புறமாக தாளிடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்து போனார். கதவைத் திறந்து விட்டு,” உன்னிடம் பேசிக்கொண்டிருந்த பெண் எங்கே?” என்று கேட்டு இருக்கிறார். “தெரியல, இங்கதான் இருந்தாங்க, நான் போன் வந்ததால் உள்ளே போயிட்டேன்” என்று விஜயகுமாரி சொல்லியிருக்கிறார்.

இருவரும் முன்னறைக்கு வந்து பார்த்தபோது அந்த அறையின் கதவு திறக்கப்பட்டு, அந்த அறையில் உள்ள அலமாரியில் வைக்கப்பட்டிருந்த மூன்று தங்கச் சங்கிலிகள், மூன்று ஜோடி வளையல், மூன்று தங்க மோதிரம், ஒரு ஜோடி வைரத் தோடு, முத்துமாலை, முத்திரைக் காசு உட்பட 35 சவரன் நகைகளை அந்தப் பெண் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்து.

அதனையடுத்து அந்த வீதியில் அனைத்து பக்கங்களிலும் அந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தேடிபார்த்தார்கள். ஆனால் அவர் மாயமாகி விட்டார். அதனால் இதுகுறித்து துறையூர் போலீஸாருக்குத் தகவல் கொடுக்கபட்டது. துறையூர் போலீஸார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )