ராசிபுரம் அடுத்த அத்தனூர் அம்மன் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா

ராசிபுரம் அடுத்த அத்தனூர் அம்மன் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடந்தது: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பாரக்கல்புதூரில் அமைத்துள்ள அத்தனூர் அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா கடந்த 6ஆம் தேதி கிராமசாந்தி நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினந்தோறும் அபிஷேக, ஆராதனை நடந்தது.
கடந்த 9ஆம் தேதி காலை 7.30 மணிக்கு விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் மூலவருக்கு தீபாராதனை நடந்தது.
காலை 9 மணிக்கு காவிரி தீர்த்தம் லாரி மூலம் கொண்டு வந்து, தீர்த்த குடங்களில் நிரப்பி, பூஜை செய்து ஆண்டகளூர்கேட் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து யானை, குதிரை, பசு மற்றும் தாரை தப்பட்டை முதலிய மங்கள வாத்தியங்கள் முழங்க தீர்த்தக்குடம், முளைப்பாரி, விக்கிரகங்கள் ஆகியவற்றுடன் ஆயிரக்கணக்கா பக்தர்கள் ஊர்வலமாக ஆலயத்திற்கு கொண்டு வந்தனர்.
மாலை 5 மணிக்கு விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தியுடன் தீபாராதனை நடந்தது.
11ம் தேதி காலை 7 மணிக்கு 2ம் கால பூஜை நடந்தது. மாலை 4.30 மணிக்கு 3ம் கால பூஜை நடந்தது. நள்ளிரவு 1 மணிக்கு ஸ்ரீ அத்தனூர் அம்மன் மூலவர் பிரதிஷ்டை நடந்தது. 12ம் தேதி காலை 6 மணிக்கு 4ம் கால பூஜை நடந்தது.
13ம் தேதியான இன்று காலை 5 மணிக்கு விமானம் மற்றும் இராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 5:30 மணிக்கு அத்தனூர் அம்மனுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகத்தை சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க மிக சிறப்பாக நடத்தி வைத்தனர்.
தொடர்ந்து, அம்மனுக்கு மஹா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.