8 ஆண்டுகளில் நாடு மிகப்பெரிய வளர்ச்சி பெற்றுள்ளது-மத்திய மந்திரி பெருமிதம். பிரதமர் மோடி ஆட்சியில் நாடு மிகப்பெரிய வளர்ச்சி பெற்றுள்ளதாக விழாவில் பேசியுள்ளார்.

திருமங்கலம் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பா.ஜ.க. சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருமங்கலத்தில் இன்று நடந்தது. இதில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச சிலிண்டர் மற்றும் அடுப்பு, தொழிலாளருக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
மத்திய அரசின் பிரதமர் மோடி ஆட்சியில் ஏழை மக்கள், கடைக்கோடி தொண்டனுக்கும் திட்டங்கள் போய் சேருகின்றன. ஜல்சக்தி திட்டத்தின் மூலம் கிராமங்களில் வீடு, வீடாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் வருடத்திற்கு ரூ.6 ஆயிரத்தை மோடி வழங்கி வருகிறார்.
இலவச கேஸ் வழங்கப்பட்டு வருகிறது. வீடு இல்லாத அனைவருக்கும் வீடு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலை சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. டெக்ஸ்டைல் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் 8 ஆண்டு களில் நாடு மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று உள்ளது.
தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மருத்துவ வசதி கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை இந்த சாதனைகளில் ஒன்றாக திகழ்கிறது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில பொது செயலாளர் சீனிவாசன் மாவட்டத் தலைவர் சுசீந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம், நிர்வாகிகள் ஓம்முருகன், சரவணகுமார், தமிழ்மணி, சின்னசாமி, விக்னேஸ்வரன், சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.