கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்த விவகாரத்தில் வாட்ஸ்ஆப் மூலம் ஆடியோ அனுப்பி கலவரத்தைத் தூண்ட முயன்றதாக உடுமலை இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்த விவகாரத்தில் வாட்ஸ்ஆப் மூலம் ஆடியோ அனுப்பி கலவரத்தைத் தூண்ட முயன்றதாக உடுமலை இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது’ உடுமலையை அடுத்த தென்பூதிநத்தம் பகுதியைச் சேர்ந்த மாசானம் என்பவரது மகன் பூபதி(வயது 18).கார் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார்.இந்தநிலையில் நேற்று பூபதியின் நண்பர் கதிரேசன் என்பவர் போராட்டத்தைத் தூண்டும் வகையிலான வாய்ஸ் மெசேஜ் ஒன்று வந்திருப்பதாகக் கூறியுள்ளார்.
அதனைப் பார்த்தபோது ஜஸ்டிஸ் பார் ஸ்ரீமதி என்ற வாசகத்துடன் கள்ளக்குறிச்சி அருகே இறந்த தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் புகைப்படத்துடன் ஆடியோ ஒன்று இருந்துள்ளது.அந்த ஆடியோவில்’உடுமலை நகரைச் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து அனைத்து இளைஞர்கள்,மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்போடு போராட்டம் நடத்தலாம்.என்னால் 1500 க்கும் குறையாமல் ஆட்களை சேர்க்க முடியும்.
போலீஸ்காரரையும் மற்ற எவரையும் வெட்டலாம்,குத்தலாம்,கொல்லலாம்.அங்கு ஸ்கூலைதானே எரித்தார்கள்.வாங்க.இங்கே காவல் நிலையத்தைக் கொளுத்தலாம்.அனைத்து இளைஞர்களும் நமது தங்கை ஸ்ரீமதிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தகுந்த நீதி கிடைக்க போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.இதில் நிறைய உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது.அதனை நாம் உடைத்து எறிவோம்’என்று பேசியுள்ள நபர் தொடர்பு எண்ணையும் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து பூபதி அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.அப்போது பேசிய நபர் சிவசக்தி காலனியிலுள்ள அரசு துவக்கப்பள்ளி அருகே வரச் சொல்லியுள்ளார்.பூபதி தனது நண்பர்கள் தௌபிக் மற்றும் கிருபாசங்கருடன் அங்கு சென்றுள்ளார்.அப்போது அங்கு வந்த சிவசக்தி காலனியை சேர்ந்த தியாகராஜன் மகன் வெங்கடேஷ்(வயது 20) என்பவரிடம் நடந்த உண்மை என்ன என்று தெரியாமல் வீணாக வாய்ஸ் மெசேஜ் போடுகிறீர்கள்.
இதனால் சட்ட விரோதமாக பொதுமக்கள் ஒன்று கூடி அசம்பாவிதங்கள் ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர்.இதனால் கோபமடைந்த வெங்கடேஷ் பூபதியை கெட்ட வார்த்தையில் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதுகுறித்து உடுமலை போலீஸ் நிலையத்தில் பூபதி கொடுத்த புகாரின் அடிப்படையில் வெங்கடேஷை கைது செய்த போலீசார் அவரை சிறையிலடைத்தனர். கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தின் தொடர்ச்சியாக மிகப் பெரிய கலவரம் வெடித்து நாடு முழுவதும் பரபரப்பாக மாறியுள்ளது.அந்த பரபரப்பு அடங்கும் முன் உடுமலை பகுதியில் வாட்ஸ்ஆப் மூலம் ஆடியோ அனுப்பி கலவரத்தைத் தூண்ட முயன்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.