தூத்துக்குடியில் பிரபல நகைக்கடையில் விஜிலன்ஸ் அதிகாரிகள் என்று கூறி நகையை சுருட்ட பார்த்த 2பெண்கள் கையும், களவுமாக பிடிப்பட்டனர்!.

தூத்துக்குடி, தமிழ் சாலை தென்பாகம் காவல் நிலையம் எதிரே பிரபல நகை கடையான உள்ளது. இந்தக் கடையில் மாலை சுமார் 6 மணி அளவில் டிப் டாப்பாக ஆடை அணிந்து வந்த 2 பெண்கள், கடைக்குள் சென்று நகைகளை பார்த்தனர். சுமார் 10 பவுன் நகை வரை தேர்வு செய்து, பின்பு அங்கிருந்த ஊழியர்களிடம் உங்களது கடை முதலாளி எங்கே இருக்கிறார் அவரை வரச் சொல்லுங்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு ஊழியர் என்ன காரணம் எங்களிடம் சொல்லுங்கள் என்று கேட்கவே உடனடியாக அருகில் இருந்த மேனேஜர், “மேடம் என்ன விவரம் எங்களுடன் சொல்லுங்கள்” என்று அவரும் கேட்டுள்ளார்.

உடனே அந்த 2 பெண்களும் நாங்கள் விஜிலன்ஸ் அதிகாரி என்று கூறி தங்களிடமிருந்த ஐடி கார்டை காட்டியுள்ளார்கள். மேலும் கடை ஊழியர்களை மிரட்டி, நாங்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு மீதி நகையை இலவசமாக தர வேண்டும் என்று மிரட்டி உள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த கடை ஊழியர்கள் அவர்கள் இருவரையும் அமர வைத்து கூல்டிரிங்ஸ் கொடுத்துள்ளனர். பின்னர் மத்திய பாகம் காவல் நிலையத்திற்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் ஐயப்பன் தலைமையிலான போலீசார் அந்த நகை கடைக்கு விரைந்து சென்று 2 பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் கிராமத்தைச் சேர்ந்த சரவணகுமார் மனைவி பாபி என்ற ராஜலட்சுமி (36), சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பெரியகடை கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி மனைவி பரமேஸ்வரி (36), என்றும், அவர்கள் அதிகாரிகள் என்று ஏமாற்றி நகையை வாங்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இவர்கள் தமிழகம் முழுதும் நகை கடையில் கைவரிசை காட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
