காட்டாற்றில் மணல் திருட்டை தடுத்த கிராம உதவியாளரை கொலை செய்த வழக்கில் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே விளாங்குளம் காட்டாற்றில் அனுமதியின்றி மாட்டுவண்டிகள் மற்றும் டிராக்டரில் மணல் கடத்தல் நடைபெற்று வந்தது.
இது தொடர்பாக விளாங்குளம் கிராம உதவியாளர் சி.பூமிநாதன்(29) பேராவூரணி வட்டத்தில் உள்ள வருவாய்துறை உயர் அதிகாரிகளுக்கும், காவல்த்துறையினருக்கும் தகவல் அளித்து வந்துள்ளார். இதனால் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர்கள் பூமிநாதனிடம் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு செப்.9-ம் தேதி இரவு பட்டங்காடு கிராமத்தில் மணல் திருட்டு நடைபெறவதாக வந்த தகவலை அடுத்து அதை பார்வையிட சென்ற பூமிநாதனை உருட்டு கட்டையால் தாக்கி, இரு சக்கர வாகனத்தை சேதப்படுத்தி சாலையோரும் இருந்த முள்புதரில் வீசினர்.
பின்னர், பூமிநாதனின் தந்தை சின்னையாவுக்கு பட்டங்காட்டைச் சேர்ந்த அல்லிராணி என்பவர் போன் செய்து, உங்களது மகன் விபத்தில் காயமடைந்து கிடப்பதாக கூறியுள்ளார். தகவல் வந்ததும் சின்னையா அங்கு சென்று சுயநினைவில்லாமல் கிடந்த மகனை மீட்டு, மணமேல்குடி மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி மறுநாள் செப்.10-ம் தேதி பூமிநாதன் இறந்தார். இதுகுறித்து பேராவூரணி போலீஸார் முதலில் விபத்து வழக்காகப் பதிவு செய்து விசாரித்தனர். தொடர்ந்து போலீஸாருக்கு பல்வேறு சந்தேகம் எழுந்ததால், விசாரணையை வேறு கோணத்தில் விசாரித்தனர். முதலில் அல்லிராணியிடம் முதலில் விசாரணையை தொடங்கினர். விசாரணையில், பட்டங்காட்டை சேர்ந்த சிலர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்ததால், அதற்கு இடையூறாக இருந்த பூமிநாதனை போன் செய்து, வரவழைத்து அவரை அல்லிராணி(42), அவரது தம்பி சீனிவாசன் (35), ப.அண்ணாமலை (30), ப.சந்திரபோஸ் (32), கா.அய்யப்பன் (30) ஆகியோர் உருட்டு கட்டை மற்றும் கம்புகளால் பூமிநாதனை தாக்கியதாவும், அதில் படுகாயமடைந்து சுயநினைவு இழந்த பின்னர் அவரது தந்தைக்கு தகவல் கொடுத்ததாகவும் தெரியவந்தது.
இதையடுத்து கொலை வழக்காகப் பதிவு செய்த போலீஸார், குற்றம்சாட்டபட்டவர்கள் மீது, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஐந்து பேரையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும், கொலை வழக்கிலும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சில மாதங்களில் 5 பேரும் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தனர். இதுதொடர்பான வழக்கு தஞ்சாவூர் மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் (குடியுரிமை பாதுகாப்பு) நடைபெற்று வந்தது. அப்போது அரசு தரப்பு சாட்சியாக 15 பேர் சாட்சியம் அளித்தனர். இதையடுத்து இவ்வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம்சாட்டப்பட்ட 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
