இலங்கை தமிழர்களுக்கு வேலூர் உட்பட 933 கான்கிரீட் வீடுகள் கட்டப்படுகிறது…
வேலூர்: தமிழகத்தில் 106 நிவாரண முகாம்களில் வசிக்கும் 19,046 இலங்கைத் தமிழர்களுக்கான இலவச வீட்டுத் திட்டத்தை நவம்பர் மாதம் வேலூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து இலங்கை தமிழர்கள் முகாம்களில் உள்ள மாற்றுத் தளங்கள் மற்றும் சரிசெய்ய முடியாத வீடுகள் கண்டறியபட்டது. இலங்கைத் தமிழர்கள் அற்ப வசதிகளுடன் பல ஆண்டுகளாக வாழ்ந்த பழைய தங்குமிடங்களை இடித்து அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களிலும் 1990 முதல் 18 நிவாரண முகாம்களில் மொத்தம் 2,239 குடும்பங்கள் உள்ளன. திருவண்ணாமலையில் தான் அதிக அளவில் இலங்கை தமிழர்கள் உள்ளனர். 12 முகாம்களில் 1,111 குடும்பங்கள் உள்ளன, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையில் தலா இரண்டு முகாம்கள் உள்ளன.
குடியாத்தம் (55 குடும்பங்கள்), வாலாஜா (289 குடும்பங்கள்), சோளிங்கர் (160 குடும்பங்கள்), ஆம்பூர் (310 குடும்பங்கள்), செய்யாறு (112 குடும்பங்கள்), ஆரணி (94 குடும்பங்கள்) மற்றும் செங்கம் (111 குடும்பங்கள்) ஆகியவை இந்த நிவாரண முகாம்களில் அடங்கும். திருவண்ணாமலை நகரம், வந்தவாசி, கலசபாக்கம் மற்றும் போளூர் ஆகிய இடங்களிலும் முகாம்கள் உள்ளன.
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீடும் 300 சதுர அடி. ஒரு அறையுடன், கழிப்பறை மற்றும் ஒரு சமையலறை அமைக்கப்படுகிறது. புதிய வீடுகளுக்கு இலவச குடிநீர் இணைப்பு மற்றும் மின்சாரம் வழங்கப்படும். மேலும், முகாம்களில் மேல்நிலைத் தொட்டிகளும்கட்டப்படும். ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.5.85 லட்சம் அரசு கருவூலத்திற்கு செலவாகும். இந்த மாவட்டங்களில் முதற்கட்டமாக 933 வீடுகள் கட்டப்படுகின்றன.
திருவண்ணாமலையில் அதிகபட்சமாக 255 வீடுகள் கட்டப்படும் அதைத் தொடர்ந்து திருப்பத்தூர் 236 வீடுகள், ராணிப்பேட்டை 222 வீடுகள் மற்றும் வேலூர் 220 வீடுகள் கட்டப்படும். வேலூர் அருகே உள்ள மேல்மொணவூர் இலங்கை தமிழர்கள் முகாமில் முதல் கட்டமாக 220 வீடுகள் கட்டப்பட உள்ளன.இதற்காக அங்குள்ள பழைய வீடுகளை இடிக்கும் பணி நடந்து வருகிறது.
அங்கிருந்தவர்களுக்கு தற்காலிகமாக தங்குவதற்கு செட் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய வீடுகளுடன், ஒவ்வொரு முகாமிலும் ஒரு சமூக மையம், படிக்க மற்றும் கல்வி நோக்கங்களுக்காக ஒரு பொதுவான குழந்தைகள் மையம் மற்றும் ஒரு ரேசன் கடை ஆகியவையும் கட்டப்படுகின்றன. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலையில் உள்ள இலங்கைத் தமிழர்கள் முகாம் களில், சில நாட்களுக்கு முன்பு கட்டுமானப் பணிகள் தொடங்கியதால், 9 மாதங்களில் கான்கிரீட் வீடுகளில் இலங்கைத் தமிழர்கள் குடியேறுவார்கள் என தெரிவித்தனர்.