பிசான சாகுபடிக்காக மேக்கரை அடவிநயினார் அணையில் இருந்து நீர் திறப்பு!

தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகா மேக்கரை கிராமத்தில் 132 அடி உயரத்தில் அமைந்துள்ளது அடவிநயினார் கோவில் நீர்தேக்கம்.
இந்த நிலையில், பிசான பருவ சாகுபடிக்காக திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து தமிழக அரசு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது.
அதன்படி, அடவிநயினார் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் கலந்து கொண்டு அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.
இந்த அணை மூலம், நேரடி மற்றும் மறைமுகமாக மொத்தம் 7,643.15 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த அணை இன்று முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 26 ந்தேதி வரை 150 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு விநாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அணை திறப்பு நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் இராஜேந்திரன்,
இளம் பொறியாளர் பாலசுப்பிரமணியன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் ஜாஹீர் உசேன் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.