சதுரகிரிமலை, சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி.!!

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்து வந்தது. இதனால் நேற்று, சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷம் தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் காட்டுத்தீ முழுமையாக அணைக்கப்பட்டதால் மீண்டும் இன்று 8ம் தேதி (சனி கிழமை), நாளை 9ம் தேதி (ஞாயிறு கிழமை) பௌர்ணமி நாள், நாளை மறுநாள் 10ம் தேதி (திங்கள் கிழமை) ஆகிய 3 நாட்களும் மலைக் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு, வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் சுந்தரமகாலிங்கம் சுவாமியின் தீவிர பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாளை ஞாயிறு கிழமை விடுமுறை நாளில் பௌர்ணமி வருவதால், அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக சதுரகிரிமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.