BREAKING NEWS

இரண்டாவது எம்ஜிஆர் – முதல்வர் ஸ்டாலினை புகழும் அதிமுக முன்னாள் அமைச்சர்.

இரண்டாவது எம்ஜிஆர் – முதல்வர் ஸ்டாலினை புகழும் அதிமுக முன்னாள் அமைச்சர்.

எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் அவரது அமைச்சரவையில் பல முக்கிய துறைகளை வகித்த அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வி.வி சாமிநாதன், தமிழக முதல்வர் ஸ்டாலினை இரண்டாவது எம்ஜிஆர் என புகழ்ந்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு அவர் ஸ்டாலினை போற்றியுள்ளார்.

 

வள்ளலார் பிறந்த தினமான அக்டோபர் 5 ம் தேதியன்று வடலூரில் 100 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் பெயரால் சர்வதேச மையம் அமைக்கப்படும் என அறிவித்து அவர் பிறந்த நாளை தனிப்பெரும் கருணை நாளாக கொண்டாடுவது என்ற அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் பேசியிருப்பது வரலாற்றில் முக்கியமான நாள், மறக்க முடியாத நாள். இதனை செய்திருப்பதன் மூலம் முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது எம்ஜிஆராக எனக்குத் தோன்றுகிறார்.

 

பேரறிஞர் அண்ணாவின் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கைப்படி திமுக ஆன்மீகத்துக்கு விரோதி என்ற தவறான குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது வரப்போகும் தேர்தலுக்காக அறிவிக்கப் பட்டது அல்ல, திமுக தேர்தல் அறிக்கையிலேயே கொடுக்கப்பட்ட வாக்குறுதி.

 

விவேகானந்தர், ரவீந்திரநாத் தாகூர் போன்று உலக அளவில் புகழடைய வேண்டியவர் வள்ளலார். அன்னதானத்தை பிரதானமாக்கி அவர் கடைபிடிக்க சொன்ன அறநெறிகளை பின்பற்ற மறந்த மக்களை பார்த்து நொந்து போய் கடைவிரித்தேன். கொள்வார் இல்லை, கட்டிவிட்டேன் கடையை என்று சொல்லி அறைக்குள் சென்று கதவை மூடியவர் இன்றுவரை திரும்பவே இல்லை.

 

 

அப்படிப்பட்டவர் பெயரில் மாபெரும் சர்வதேச மையம் அமைத்து, ஆண்டு முழுவதும் அன்னதானம் செய்து அவர் கொள்கையை இந்திய அளவிலும் உலக அளவிலும் பரப்ப எடுத்துள்ள முதல்வரின் முயற்சியை கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவன் என்ற முறையில் வரவேற்கிறேன், பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

 

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் எட்டாவது வள்ளல் என்று போற்றப்பட்டார். ஏழை குழந்தைகள் பள்ளிக்கு போவதற்கு முன்பே சாதி மத பேதமின்றி அவர்களுக்கு வள்ளலார் வழியில் சத்துணவு தந்தார். அவரை ஐநா சபை பாராட்டியது. அதேபோல பள்ளி பிள்ளைகளுக்கு காலை உணவை வழங்கி இருக்கிறார் தற்போதைய முதல்வர் ஸ்டாலின்.

 

வள்ளலாரின் நெறி, புகழ் வளர்க்கும் இரண்டாவது எம்ஜிஆர் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்’ என்று வி.வி.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )