நாகர்கோவிலில் நள்ளிரவில் கதவை உடைத்து 52 பவுன் கொள்ளை.
நாகர்கோவிலில் ஸ்கேன் சென்டர் மேலாளர் வீட்டில் நள்ளிரவில் புகுந்த மர்மக்கும்பல் 52 பவுன் நகைகள், 60 ஆயிரம் ரொக்கப்பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர நாராயணன்(38). இவர் நாகர்கோவிலில் வெட்டூர்ணிமடம் பகுதியில் உள்ள ஸ்கேன் சென்டர் ஒன்றில் மேலாளராக வேலை செய்துவருகிறார்.
இவர் சைமன் நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார். நேற்று இரவு, சங்கர நாராயணனின் மனைவி, தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வில்லுக்குறி பகுதியில் இருக்கும் தன் தாயார் வீட்டுக்குச் சென்றிருந்தார்.
சங்கர நாராயணன் வேலைசெய்யும் ஸ்கேன் சென்டரில் நேற்று இரவு புதிய கருவி ஒன்று வந்ததால் அதைப் பார்க்கும் பொறுப்பில் இருந்தார். இரவு அந்த வேலை முடிந்து இன்று அதிகாலை 4 மணிக்குத்தான் அவர் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 52 பவுன் நகைகள் மற்றும் 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து சங்கர நாராயணன் நேசமணிநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
சங்கர நாராயணனுக்கு இரவில் ஸ்கேன் சென்டரில் வேலை இருப்பதையும், அவரது குடும்பத்தினர் வெளியூர் சென்றிருப்பதையும் அறிந்த உள்ளூர் கொள்ளையர்களே வீட்டின் கதவை உடைத்து இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.