தமுமுக தலைமை பொதுக்குழு கூட்டத்தில் முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீடு அளவை 5 விழுக்காடாக அதிகப்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின்
மாநில தலைமை பொதுக்குழு கூட்டம் திருச்சியில் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
தலைமைப் பொதுக்குழுவில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்;-
முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீடு அளவை 5 விழுக்காடாக அதிகப்படுத்த வேண்டும். அரசியல் சூழ்ச்சிகளால் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயம் தாமதிக்கப்பட்ட சமூகநீதியைப் பெற்றிட முத்தமிழறிஞர் கலைஞர் வழங்கிய 3.5 தனி இடஒதுக்கீடு உதவியது.
முஸ்லிம் சமுதாயத்தின் பின்னடைவு நிலையை அன்றைய மன்மோகன் சிங் தலைமையிலான ஒன்றிய அரசு அமைத்த நீதிபதி ராஜிந்தர் சச்சார் உயர்நிலைக்குழு, நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் ஆகியவற்றின் பரிந்துரைகளின் ஒளியில் உற்று நோக்கினால் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 3.5 தனி இடஒதுக்கீட்டின் போதாமை புலப்படும்.
முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டு அளவை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை கலைஞர் அவர்கள் கனிவோடு பரிசீலித்தும் கூட,அதை நிறைவேற்ற கால அவகாசம் கைகூடவில்லை. தமிழக முதலமைச்சர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழக முஸ்லிம்களின் தனி இடஒதுக்கீடு அளவை கனிவன்போடு பரிசீலித்து குறைந்தபட்சம் 5 சதவீதமாகவேனும் அதிகரித்திட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
கல்வி, வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் கடந்த தனி காலங்களில் மிகப்பெரிய குளறுபடிகள் நடந்துள்ளன. முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தமுமுகவின் ஜீவாதாரக் கோரிக்கையை ஏற்று முத்தமிறிஞர் கலைஞர் வழங்கிய 3.5% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகள் பல இடங்களில் செய்த குளறுபடிகளால் முஸ்லிம்களுக்கான வாய்ப்புகள் பறிபோயுள்ளன.
கடந்த அதிமுக ஆட்சி பாஜகவின் கைப்பாவையாகச் செயல்பட்டதால் முஸ்லிம் சமுதாயத்திற்கு கல்வி வேலை வாய்ப்புகளில் கடுமையானப் பாதிப்பு மிக நுணுக்கமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதைக் களைந்திடும் வண்ணம் தமிழகத்தை ஆளும் சமூகநீதி அரசு, முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீடு பயனாளிகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.
பின்னடைவுப் பணியிடங்களைக் கணக்கிட்டு அவற்றிலும் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய வாய்ப்பை வழங்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இப்பொதுக் குழு தனது நன்றியை தெரிவித்து கொள்கிறது.
தமிழகத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (என் பி ஆர்) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என் ஆர் சி) தயாரிப்பு பணிகளை தமிழக அரசு அனுமதிக்க கூடாது என்று இப்பொதுக் குழு வலியுறுத்துகின்றது.
பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடி வரும் நெடுங்கால தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது தமுமுகவின் நெடுங்கால கோரிக்கை ஆகும்.
நீண்டகால சிறைவாசிகளின் விடுதலைக்காக தமுமுக நடத்திய நியாயமிகு போராட்டங்கள் தமிழக வரலாற்றில் மைல்கல்லாய் பதிந்தவை.
திமுகவும் நெடுங்கால சிறைவாசிகளின் விடுதலை குறித்து கனிவோடு பரிசீலித்து அவர்களை விடுவிக்க வாக்களித்துள்ளது.
அவ்வாக்குறுதியின் படி தமிழகச் சிறைகளில் நீண்ட நெடுங்காலமாக வாடிவரும் தண்டனை சிறைவாசிகள் குறிப்பாக கடந்த ஆட்சிகளில் முன் விடுதலைகளில் கொடுமையாக வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம் சிறைவாசிகள் முன்விடுதலை செய்யப்பட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
கோவையில் கடந்த அக்டோபர் 23 அன்று நடந்த எரிவாயு உருளை வெடிப்பு சம்பவத்தை இப்பொதுக்குழு மிகுந்த கவலையுடன் நோக்குகிறது.
இதுகுறித்த விசாரணை எவ்வித உள்நோக்கமும் இன்றி மிகுந்த நேர்மையோடு நடத்தப்பட வேண்டும் என இப்பொதுக்குழு விரும்புகிறது.
குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும் பாரபட்சமற்றுக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகத்தை அமளிக்காடாக்குவதன் மூலம் அரசியல் லாபம் அடையத் துடிக்கும் தீயசக்திகளின் கை இத்தகைய சம்பவங்களில் இதற்குமுன் இருந்து வந்துள்ளது என்பதையும் இப்பொதுக்குழு நினைவூட்டுகிறது.
முறையான விசாரணைக்கு இடையூறு செய்யும் விதத்தில் தமது விருப்பங்களை விசாரணை முடிவுபோல வெளியிட்டுவரும் ஃபாசிச நபர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தமிழ்நாட்டில் சாதி, மத, பேதம் கடந்து மக்கள் இணைந்தும், பிணைந்தும் வாழும் உயர்ந்த பண்பாடு தொன்றுதொட்டு நிலவி வருகிறது.
அற்பமான அரசியல் லாபங்களுக்காக இந்த அற்புதமான சமூக உறவுகளை சீர்குலைத்திட சங்பரிவார மதவெறிக் கும்பல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதீத வெறியுடன் சதிவேலைகளைச் செய்து வருகிறது.
சாதிவெறி சனாதனத்தை சிம்மாசனம் ஏற்றி, சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்க முயலும் சங்பரிவார சக்திகளின் சதிச்செயல்களை சகல தளங்களிலும் முறியடித்திடும் வகையில் தமிழ்நாட்டின் மக்கள் யாவரும் ஒன்றிணைந்து ஓரணியில் நிற்கவேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
பொது சிவில் சட்ட முயற்சியைக் குப்பைக் கூடையில் வீசும் வகையில் தமிழக அரசின் எதிர்வினை இருக்கவேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தமிழக அரசு நியமித்துள்ள குழு தனியார் சட்டங்கள் குறித்த மிகுந்த நிபுணத்துவம் கொண்ட ஓய்வுபெற்ற முஸ்லிம் நீதிபதிகளையும், நிபுணர்களையும் கொண்ட குழுவாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
இந்து, இந்தி, இந்தியா என்ற சங்பரிவாரக் கொள்கையின் செயல்பட்டுவரும் ஒன்றிய அரசு அடிப்படையில் அண்மையில் இந்தியைக் கட்டாயமாக்கும் அறிவிக்கையை வெளியிட்டது. இதற்கு இப்பொதுக்குழு வன்மையான கண்டனம் தெரிவிக்கிறது.
ஆட்சி மொழி, அலுவல் மொழி, வழக்காடு மொழி என அனைத்து நிலைகளிலும் தமிழ்நாட்டில் தமிழுக்கே முதலிடம், தொடர்பு மொழியாக ஆங்கிலம் என இருமொழிக் கொள்கைக்கு ஒருபோதும் இடையூறு செய்யக்கூடாது என ஒன்றிய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தமிழ்நாட்டின் சமூக அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்தோடு இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராகத் தொடர்ந்து பேசிவரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
திராவிட தத்துவம் அபாயமானது. உலக நாடுகள் அனைத்தும் ஒரு மதம் சார்ந்தே உள்ளன. எனவே இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல என்று சங்கிகளின் கொள்கையை நேரடியாக பரப்புரை செய்து வரும் இவர் எந்த மாநிலத்திற்கும் ஆளுநராக இருப்பதற்கு அறவே தகுதியற்றவர்.
ஆர்எஸ்எஸ் ரவியாக செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியைப் பதவி நீக்கம் செய்து தமிழ்நாட்டை விட்டு உடனடியாக அப்புறப்படுத்தாவிடில், ஜனநாயக அடிப்படையிலான தொடர் இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.
தமிழகத்தில் உள்ள பல்கலைகழகத்தின் வேந்தராக தமிழ்நாட்டின முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை இப்பொதுக் குழு வரவேற்கிறது. இச்சட்டத்திற்கு ஆளுநர் ரவி உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டுமென இப்பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.
நீண்ட காலம் தமிழக பல்கலைகழகங்களில் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த யாரும் துணை வேந்தர் இல்லை என்ற நிலையை போக்க வேண்டுமென இப்பொதுக் குழு வலியுறுத்துகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட 2.5% இட ஒதுக்கீடு C மற்றும் D பிரிவு பணிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது A மற்றும் B பிரிவு பணிகளுக்கும்.. முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகிகள் தேர்வு.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அமைப்புத் தேர்தல் கடந்த 2022 ஆகஸ்ட் மாதத்திலிருந்து முதல் கிளை முதல் மாவட்டம் வரை நடைபெற்றது. இதற்காக எம்.எச். ஜீப்ரி காசிம். பி.எம்.ஆர் சம்சுதீன் மற்றும் தாஹிர் பாஷா ஆகியோரை கொண்ட தலைமைத் தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டது.
36 தேர்தல் ஆணையாளர்கள் இதற்காக நியமிக்கப்பட்டார்கள். தேர்தலின் இறுதி கட்டமாக தமுமுக தலைவர். பொதுச் செயலளார் மற்றும் பொருளாளர் ஆகிய பொறுப்புகளுக்கு இன்று நடைபெற்ற தலைமை பொதுக் குழுவில் தேர்தல் நடைபெற்றது. இதில் பின்வருவோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர் எம். எச். ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளர் பேராசிரியர் ஜெ. ஹாஜா கனி,
பொருளாளர் பொறியாளர் என். ஷபியுல்லாஹ் கான் ஆகியோர் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.