இரண்டு நாட்களுக்கு பின் நம்பியின் உடலை பெற்று சென்ற உறவினர்கள்!
திருநெல்வேலி மாநகரம் பேட்டையிலுள்ள ஜெனி பைப்ஸ் என்ற நிறுவனத்தில் வேலை செய்து வந்த சுத்தமல்லி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட நடுக்கல்லூர் நடுத்தெருவைச் சேர்ந்த குமாரவேல் மகன் நம்பி என்பவர்.
திங்கள் அன்று இரவு பணிக்காக பேட்டை ஐடிஐ சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத சில நபர்கள் அவரை வழிமறித்து வெட்டி படுகொலை செய்தனர்
இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே நம்பி உயிர் இழந்தார். இதனைத் தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் அடிப்படையில் பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வந்தனர்
இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் போலிஸார் தீவிமாக தேடி வந்தனர்.
மேலும் இந்த கொலை சம்பவத்தை கண்டித்து நடுக்கல்லூர் பகுதியில் உடலை வாங்க மறுத்து ஊர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதால் 500 க்கும் மேற்பட்ட போலிஸார் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து நடுக்கல்லூர் பகுதியில் உள்ள 2 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது
சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கடையம்,முக்கூடல், அம்பாசமுத்திரம், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதோடு அப்பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
இதன்பின்னர் காவல்துறைக்கு இரண்டு நாள் கெடு விதித்து ஊர் பொதுமக்கள், கொலையை செய்ய தூண்டிய நபர்களை கைது செய்ய வேண்டும், கொலையான நம்பிராஜனின் கர்பிணி மனைவிக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி கலைந்து சென்றனர்.
நம்பிக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தான் திருமணமாகி இருந்தது என்பது குறிப்பிடதக்கது.
இக்கொலை வழக்கில் எதிரிகளை கண்டறிந்து கைது செய்யும் பொருட்டு, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அவினாஷ் குமார், உத்தரவின் பேரில், திருநெல்வேலி மாநகர மேற்கு மாவட்ட காவல் துணை ஆணையாளர் K.சரவணகுமார் நேரடி கண்காணிப்பில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்த நிலையில்,
1.இளஞ்சிறார். 2.பாலசுந்தர் (22). 3.வேலா @ ஆதிவேலாயுதபெருமாள் (23), 4.கோபாலகிருஷ்ணன் (30) மற்றும் 5.நவநீதகிருஷ்ணன் @ நாகு (19) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலையுண்ட நம்பி சில மாதங்களுக்கு முன்பு நடுக்கல்லூரில் இருபிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு தரப்பிற்கு ஆதரவாக செயல்பட்டதால் ஏற்பட்ட முன்விரோதத்தின் காரணமாக நம்பியை வெட்டி கொலை செய்துள்ளதாக போலிஸார் தெரிவித்தனர்
கொலையில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களிடம் இருந்து இரண்டு இருசக்கர வாகனங்களும், ஒரு அரிவாளும் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்குட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற எதிரிகளை தனிப்படையினர் தேடி வருவதோடு, விரைவில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்
கடந்த வாரம் சீவலப்பேரியில் ஒரு கொலை சம்பவம் நடந்த நிலையில் மீண்டும் ஒரு கொலை சம்பவம் அரங்கேறியிருப்பது நெல்லையில் மக்களிடையே மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் தொடர் கொலைகளை தடுக்க தென்மண்டல ஐஜி தென்காசி தூத்துக்குடி கன்னியாகுமாரி திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுடன் பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் அதிரடி ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்நிலையில் நேற்று புதன்கிழமை நம்பியின் உறவினர்கள் இன்று வியாழக்கிழமை உடலை வாங்க சம்மதம் தெரிவித்தனர்.
நடுக்கல்லூரில் கொலையுண்ட நம்பிராஜன் மனைவிக்கு அரசின் பொது சுகாதாரத்துறையில் Data Entry operator பணி நியமன ஆணையும், அவரது குடும்பத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ்,…
வீடு கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு ஆணையும் நெல்லை வருவாய் கோட்டாட்சியரால் நேரடியாக இன்று (வியாழக்கிழமை) காலை 7.30 மணியளவில் நம்பிராஜன் இல்லத்தில் அவரது மனைவியிடம் வழங்கப்பட்டது.
அரசின் சார்பில் குடும்ப நிவாரண நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் வரும் சமுதாயங்கள் பட்டியலில் தற்போது பாதிக்கப்பட்ட நம்பிராஜன் குடும்பத்தினரின் சமுதாயம் இடம் பெறாததால் நிவாரண நிதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில் நம்பிராஜன் கொலை தொடர்பாக இதுவரை 11 பேர் மீது வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் நம்பிராஜன் உடலை இன்று காலை அவரது குடும்பத்தினரும், சமுதாயத்தினரும் நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவகல்லூரி பிரேத பரிசோதனை அறையில் இருந்து நம்பியின் உடலை பெற்றுச்சென்றனர்.