பிஜேபி பிரமுகரை தாக்கிய திமுகவினரை கைது செய்யக்கோரி பிஜேபினர் திடீர் சாலை மறியல்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியில் பாரதிய ஜனதா கட்சி பிரமுகரை தாக்கிய திமுகவினரை கைது செய்யக்கோரி பாரதிய ஜனதா கட்சியினர் திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் அனுமந்தன்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் பொழுது திமுகவினர் அவர்களை தாக்கியதாக கூறி பாரதிய ஜனதா கட்சியினர் தேனி மாவட்ட தலைவர் பாண்டியன் அவர்களின் தலைமையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் போது காவல்துறைக்கு எதிராகவும், திமுக அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல் துறையினர் சாலை மறியல் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் குற்றவாளிகளை கைது செய்கிறோம் என்று கூறிய பின்பு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சாலை ஓரத்தில் நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த சாலை மறியலில் பெண்கள், ஆண்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.