குன்றத்தூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டதில் 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் காயமடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு அடுத்ததாக கல்லூரிகளும் அதிகளவில் செயல்பட்டு வருகிறது. இதில் பயிலும் மாணவ மாணவிகளுக்காக பல்வேறு வழித்தடங்களில் கல்லூரி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுகோட்டை பகுதியில் தனியார் கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நந்தம்பாக்கத்தில் இருந்து கல்லூரி மாணவர்களை ஏற்றிக்கொண்டு பஸ் கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்தது.
பஸ்சை டிரைவர் மோகன்ராம் ஓட்டி சென்று கொண்டிருந்தார். பஸ்சில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அமர்ந்திருந்தனர் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், சிறுகளத்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது சாலையின் தடுப்பு சுவரில் டிரைவரின் கட்டுப்பாட்டு இழந்து பஸ் மோதியதில் பஸ்சின் முன் பகுதி நொறுங்கியது. இதில் பஸ்சில் அமர்ந்திருந்த கல்லூரி மாணவ, மாணவிகள் பஸ்சுக்குள்ளேயே தூக்கி வீசப்பட்டனர்.
இதில் ஒருவர் மீது ஒருவர் மோதி கொண்டதில் காயங்கள் ஏற்பட்டது மேலும் தடுப்பு சுவரில் வேகமாக மோதியதில் பஸ்ஸில் பாதி பகுதி தடுப்பு சுவருக்குள் சென்றது இதில் டிரைவர் உட்பட 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு காயம் ஏற்பட்டது.
அங்கு வந்த பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலமாக காயம் அடைந்தவர்களை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் விபத்தில் சிக்கிய பஸ்சை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி சாலையின் ஓரமாக நிறுத்தினார்கள்.
மேலும் கல்லூரி பேருந்து நிலையம் முறையாக வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சோதனை மேற்கொள்வதில்லை எனவும் கல்லூரி வாகனங்களில் ஸ்பீட் கவர்னர் வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யாத நிலையில், கல்லூரி நிர்வாகமும் பேருந்து தடத்தில் இயங்கினால் போதும் என்ற நிலையில் செயல்படுவது பெரிதும் மன வருத்தத்தை அளிப்பதாக தெரிவிக்கின்றனர்.