BREAKING NEWS

வேலூர் அருகே மணல் குவாரியில் முறைகேடு புகார்!!! அரசாணைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!!!!

வேலூர் அருகே மணல் குவாரியில் முறைகேடு புகார்!!! அரசாணைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!!!!

மணல் குவாரி முறைகேடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் பெட்டிஷன் தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வேலூரைச் சேர்ந்த கெஜராஜ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மேற்படி மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,

 

 வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், அரும்பருத்தி கிராம பகுதி சர்வே எண்.242(பகுதி)-ல் பாலாற்றுப் படுகையில் 4.90.0 ஹெக்டேர் பரப்பில் மணல்குவாரி இயக்கிட மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையம் அலுவலகம் சார்பாக  தடையின்மைச் சான்று பெறப்பட்டதன் அதனடிப்படையில், 18.04.2022 முதல் அரும்பருத்தி மணல்குவாரிப் பணிகள் துவங்கப்பட்டு மணல் அள்ளி விற்கப்பட்டு வருகின்றன.

 

ஆனால் மேற்குறிப்பிட்ட குவாரியில் விதிமுறைகளை மீறி சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கும், சுமார் பத்து அடி ஆழத்துக்கும் பொக்லைன் உள்ளிட்ட இயந்திரங்களின் மூலம் மணல் அள்ளி எடுத்துள்ளார்கள். இதனால் தகன எரிமேடை சுடுகாடு ஆகியவை சேதமடைந்துள்ளன.  

 

  வேலூர், அரும்பருத்தி மணல் குவாரியின் குத்தகைதாரர்கள், பொதுப்பணித்துறையினர் புலவரைபடத்தில் குறியிட்டுள்ள பகுதியில் மட்டும் ஒரு மீட்டர் ஆழத்திற்கு 49,000 க.மீ மணல் மட்டுமே சீராக அள்ளாமல், சுமார் நான்கு மீட்டர் ஆழமும், சுமார் 1 கிலோமீட்டர் சுற்றளவுக்கும் மணல் அள்ளி அரசு நிபந்தனைகளை மீறி வருகிறார்கள்.

 

நீர் ஆதாரங்களை பாழாக்கி, ஆற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும் போதே இயந்திரங்களின் உதவியுடன் மணல் அள்ளிக் கொண்டிருக்கிறார்கள், ஆற்றின் போக்கை மாற்றியிருக்கிறார்கள். இதனால் பாலாறு பாழ்படுத்தப்பட்டுவிட்டது. அதற்கான இழப்பீட்டை குவாரி குத்தகைதாரரிடன் வசூலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

 குறிப்பாக அந்த பகுதியில் பொக்லைன் எந்திரங்கள் மூல மாக நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மணல் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 

எனவே, அளவுக்கு அதிகமாக மணல் அள்ளும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
 இதையடுத்து நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிக்கையும், மணல் அள்ள விதிக்கப்பட்ட நிபந்தனைகள் தொடர்பான அரசாணையையும் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 20-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

 

மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.

 

CATEGORIES
TAGS