ஸ்ரீ கோபால கிருஷ்ண பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேகம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு பெருமாளை வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வானதிராஜபுரம் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கோபாலகிருஷ்ண பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்து அறநிலைய ஆட்சித் துறைக்கு சொந்தமான இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
இதனை முன்னிட்டு நான்கு கால யாகசாலை பூஜைகள் கடந்த 15 ஆம் தேதி வாஸ்து சாந்தி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து மகா சாந்தி ஹோமம், உற்சவர் திருமஞ்சனம் திருவாராதனை சாற்றுமுறை கோபூஜை அஜஸ்ர தீப பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
யாக சாலையில் வைத்து புனித கடங்களில் புண்ணிய நீர் நிரப்பப்பட்டு நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து இன்று நான்காம் கால யாகசாலை பூஜை மகா பூர்ணாகுதி செய்யப்பட்டு நிறைவடைந்தது.
இதனை எடுத்து புனித நீர் அடங்கிய கலசங்கள் மேளதாளங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோபுர கலசத்திற்கு எடுத்துவரப்பட்டு மகா சம்ப்ரோஷணம் எனப்படும் கும்பாபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து உற்சவர் வீதி உலா நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என்று பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.