இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கில் இருவர் கைது.

உடுமலையில், இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கில் தொடர்புடைய, முக்கிய குற்றவாளி உட்பட, இருவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம் உடுமலை ஏரிப்பாளையத்தை சேர்ந்த, அஸ்வின் மனைவி வளர்மதி மற்றும் ரஞ்சித் மனைவி கவிதாவுக்கும், பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்தது.கடந்த, மே 22ம் தேதி, ரஞ்சித், கவிதா ஆகியோர், சொந்த ஊரான திருநெல்வேலிக்கு செல்ல திட்டமிட்டு, வீட்டை காலி செய்து கொண்டிருந்தனர்.
பணத்தை கொடுத்து விட்டு காலி செய்யுமாறு, அஸ்வின் மற்றும் அவரது நண்பரான, இந்து முன்னணி, உடுமலை வடக்கு நகர் பொறுப்பாளராக இருந்த குமரவேல், 24 ஆகியோர் மறித்துள்ளனர்.இதில் ஏற்பட்ட தகராறில், ரஞ்சித் மற்றும் அவருடன் இருந்தவர்கள், குமரவேலை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்து தப்பினர்.உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை சம்பவத்தில் ஈடுபட்ட, 8 பேரை ஏற்கெனவே கைது செய்தனர்.
இதில் ரஞ்சித், 29, கோவில்பட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை, உடுமலை போலீசார் கஸ்டடி எடுத்து, விசாரணை செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.மேலும், இதில் தொடர்புடைய, திருநெல்வேலியை சேர்ந்த, அமர்நாத், 28, கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள ரஞ்சித் மனைவி கவிதாவை போலீசார் தேடி வருகின்றனர்.