உளுந்து பயிரிட்ட நிலத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தர்ணா – தரையில் கீழே விழுந்து கோட்டாட்சியரை வணங்கிய விவசாயிகள்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் இளையரசனேந்தலையடுத்த ஆண்டிப்பட்டியில் உளுந்து பயிரிட்ட நிலத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அப்பகுதி விவசாயிகள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் சத்தியபாமா திருமண மண்டபத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம் கோட்டாட்சியர் மகாலட்சுமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) நாச்சியார், வேளாண் உதவி இயக்குநர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது இளையரசனேந்தல் குறுவட்டத்திற்கு உள்பட்ட ஆண்டிப்பட்டியில் கனகராஜ் என்பவருக்குச் சொந்தமான சுமார் 6 ஏக்கர் உளுந்து பயிரிட்ட நிலத்தில், உளுந்து பயிருக்கு எதிரான கலைக்கொல்லி மருந்தை தெளித்து, மகசூலுக்கு பாதிப்பை ஏற்படுத்திய மர்ம நபர்களை கண்டுபிடித்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளையரசனேந்தல் பகுதி விவசாயிகள் உள்பட திரளான விவசாயிகள் தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
அப்போது பாதிக்கப்பட்ட விவசாயி தரையில் கீழே விழுந்தது கோட்டாட்சியர் வணங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து, விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 136 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்றவிவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட 55 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.