காரை எதிர்பார்த்து பணியாற்ற வரவில்லை என கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் பேசியதால் பரபரப்பு.

கும்பகோணத்தில் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் காரை எதிர்பார்த்து பணியாற்ற வரவில்லை என துணை மேயர் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் சரவணன் தலைமை தாங்கினார். ஆணையர் செந்தில் முருகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 45 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாநகராட்சியின் வளர்ச்சி, நிதி மேம்பாடு, அடிப்படை தேவைகள், கட்டமைப்பை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் விவாதத்திற்கு கொண்டுவரப்பட்டன. கூட்டத்திற்கு என்று வரைவு செய்யப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் இன்றைய கூட்ட விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதா? என மேயர் சரவணனை பார்த்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார். மேலும் துணை மேயரின் நிர்வாக வசதிக்காக கொண்டுவரப்பட்ட திட்ட வரைவுகளை ஏன் நிறுத்தி வைத்துள்ளீர்கள்? என மேயரிடம் கேள்வி எழுப்பினர். அதனை நிறைவேற்றினால் மாநகராட்சி பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது என்பதால் அதனை நிறுத்திவைத்துள்ளதாவும், அதற்கு நான் ஒப்புதல் தரவில்லை எனவும் மேயர் கூறினார்.
கூட்டத்தில் துணைமேயர் சு.ப. தமிழழகன் பேசுகையில், நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனக்கு கார் இருந்தால் தான் மாநகராட்சி பணிகளை ஆற்ற முடியும் என்பதில்லை. நான் காரை எதிர்பார்த்து மாமன்றத்திற்கு பணியாற்ற வரவில்லை என்றார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.