கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெட்டிசெவியூரில் நீரோடைகளில் நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கும் தொடக்க பணி.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெட்டிசெவியூரில் நீரோடைகளில் நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கும் தொடக்க பணியை மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கெட்டிசெவியூர் ஊராட்சி வறட்சியான பகுதியாகும் இப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கெட்டிசெவியூர் பகுதியில் கோடைகாலங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடி தண்ணீர் தட்டுபாடு ஏற்படும் பகுதியாக உள்ளன.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வாழும் கலை அமைப்பு இணைந்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் மழைகாலங்களில் நீரோடைகளில் வீணாக செல்லும் நீரை தேக்கி வைக்க நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
கெட்டிசெவியூர் ஊராட்சிக்குட்பட்ட நீரோடை பகுதிகளில் மொத்தம் 19இடங்களில் நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கும் பணி துவக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன்உன்னி மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி ஊராட்சி மன்ற தலைவர் மகுடேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு தேசிய ஊரக வேலை பணியாட்கள் முன்னிலையில் பூமிபூஜையிட்டு தொடக்கப்பணிகளை தொடங்கி வைத்தனர்.
பின்னர் விழா பேரூரையில் வறட்சியான பகுதியில் தனியார் அமைப்பு மாவட்ட நிர்வாகத்துடன் வாழும் கலை அமைப்பு இணைந்து நீரோடைகளில் நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைப்பதால் வருங்காலங்களில் விவசாய கிணறுகளுக்கும், ஆழ்குழாய் கிணறுகளுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்படும் எனவே நமது கிராமத்திற்கு தேவையான நீர்செறிவூட்டும் கிணறுகள் அமைப்பதன் மூலம் கெட்டிசெவியூர் கிராம மக்கள் பயன் பெறுவார்கள் என்றார்.
பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் பேசுகையில் நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கும் திட்டத்தை கெட்டிசெவியூர் ஊராட்சியை தேர்வு செய்து 19இடங்களில் நீரோடைகளில் செறிவூட்டும் கிணறுகள் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கும் தனியார் அமைப்பிற்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கெட்டிசெவியூர் ஊராட்சியில் மேலும் கூடுதல் இடங்களில் நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைத்து கொடுக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தார்.