கோவில்பட்டியில் நடைபெற்ற தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி உத்தரபிரதேசம் அணி சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டியில் உத்தரப்பிரதேசம் அணி வெற்றி பெற்று 2-வது முறையாக சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது.கோவில்பட்டியில் உள்ள செயற்கை புல்வெளி மைதானத்தில் 12-வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டிகள் கடந்த 17-ம் தேதி தொடங்கி நடந்து வந்தது இன்று இறுதி போட்டி நடந்தது. முன்னதாக மாலை 4.30 மணிக்கு 3, 4-வது இடங்களுக்கான போட்டி நடந்தது. இதில், ஹாக்கி ஹரியானா அணியும், ஹாக்கி அசோசியேஷன் ஆப் ஒடிசா அணியும் மோதின. போட்டியில், ஹரியானா அணி 3 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்தது. இந்த அணியை சேர்ந்த விகாஷ் சிறந்த ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்டார்.

இறுதி போட்டியில் உத்தரபிரதேசம் ஹாக்கி அணியும், ஹாக்கி சண்டிகர் அணியும் மோதின. இதில், உத்தரபிரதேசம் அணி 2 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை வென்றது. கடந்த ஆண்டு கோவில்பட்டியில் நடந்த 11-வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டியில் உத்தரப்பிரதேசம் அணிதான் சாம்பியன் வென்றது குறிப்பிடத்தக்கது.


தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் கனிமொழி எம்.பி. தலைமை வகித்து போட்டியில் வெற்றி பெற்ற உத்தரபிரதேசம் அணிக்கு கோப்பையை வழங்கினார். நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், சுற்றுச்சூழல்- காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி, ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவர் சேகர் ஜெ.மனோகரன், கே.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், ஒன்றிய திமுக செயலாளர் பிக்கிலிபட்டி முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
