சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோயிலில் திருவாதிரை திருவிழாவில் ஆருத்ரா தரிசனம்

தென் தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருவாதிரை திருநாள் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் டிச 28ம் தேதி 4ம் திருநாள் அன்று 63 நாயன்மார்களுக்கு சுவாமி அம்பாள் திருக்கயிலாய காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. 6ம் திருநாளான டிச 30ம் தேதி காலை சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது,
அதனை தொடர்ந்து டிசம்பர் 31 ஆம் தேதி இரவு முதல் காலத்தில் சிவகாமி அம்மாள் சமேத நடராஜர் சிவப்பு சாத்தி ருத்ரன் அம்சமாகவும், இரண்டாம் காலத்தில் வெள்ளை சாத்தி பிரம்மா அம்சத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

தொடர்ந்து 8ம் நாளான ஜன 1 தேதி சிவகாமி அம்மாள் சமேத நடராஜர் மூன்றாம் காலம் காலையில் பச்சை சாத்தி விஷ்ணு அம்சமாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 9ம் திருநாள் நேற்று முன்தினம் காலை சுவாமி அம்பாள் கோரதத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. சுவாமி அம்பாளுடன் விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் சப்பரத்தில் வீதி உலா வந்தனர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.விழாவின் முக்கிய திருவிழாவான ஜனவரி 3ம்தேதி நேற்று சனிக்கிழமை 10ம் திருநாள் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 3 மணிக்கு சிவகாமிஅம்பாள் சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாரதனைகள் நடந்தது.
அதனை தொடர்ந்து 4.45 மணிக்கு கோபூஜையும் 5.00 மணிக்கு ஆருத்ரா தரிசனம் அளிக்கும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து தாண்டவ தீபாராதனையும் அதனை தொடர்ந்து வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப் படிகாரர்கள் செய்திருந்தனர்.
