சிவாலயத்திற்குள் நுழைந்ததும் விநாயகப் பெருமானை வழிபட்டு, கொடிமரத்திற்கு வணக்கம் செலுத்திவிட்டு, நந்தியெம்பெருமானை வேண்டிக் கொண்ட பின்னர் தான் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பது விதியாகும்.

சிவாலயத்திற்குள் நுழைந்ததும் விநாயகப் பெருமானை வழிபட்டு, கொடிமரத்திற்கு வணக்கம் செலுத்திவிட்டு, நந்தியெம்பெருமானை வேண்டிக் கொண்ட பின்னர் தான் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பது விதியாகும்.
கொடிமரத்திற்கும், நந்திக்கும் இடையில் நந்தியின் பின்புறம் இருந்து இறைவனை நோக்கி வழிபடவேண்டும்.
இந்த நந்தியை அதிகார நந்தி என்பார்கள். இவர் பூவுலகில் கடுமையாகத் தவம் செய்து பதினாறு வரங்களைப் பெற்றவர். சிவகணங்களின் தலைவர்.
நந்தியானவர் சிலதிருத்தலங்களில் கருவறைக்கு நேராக இல்லாமல், சற்றே விலகியபடி காட்சியளிப்பார்.
அப்படிப்பட்ட தலங்கள் திருப்பூங்கூர், திருப்பூந்துருத்தி ஆகியவையாகும். இவற்றில் இருந்தும் கொஞ்சம் வித்தியாசமாகக் காணப்படுகிறார், வட ஆற்காடு மாவட்டம் திருவல்லம் வில்வநாதேஸ்வரர் கோவில் உள்ள நந்தி.
இவர் இறைவனுக்குப் புறமுதுகு காட்டியபடி, நின்ற நிலையில் காணப்படுகிறார். இதற்கு ஒரு காரணமும் கூறப்படுகிறது.
ஒருமுறை கோவில் அர்ச்சகர், ஸ்வாமிக்கு அபிஷேகத் தீர்த்தம் எடுத்து வந்தபோது அவரை கஞ்சன் என்ற அரக்கன் வழி மறித்துத் துன்புறுத்தினான். அர்ச்சகர், இறைவனிடம் முறையிட, இறைவனோ நந்திக்கு, கண்ணால் உத்தரவிட்டார். நந்தியெம்பெருமான் உடனடியாக அசுரனை அடித்துத் துரத்தினார். மீண்டும் அசுரன் வருகிறானா? என்பதைப் பார்ப்பதற்காகவே நந்தியெம்பெருமான் கோவிலின் வாசலை நோக்கிய வண்ணம், இறைவனுக்குப் புறமுதுகு காட்டி நிற்பதாகக் கூறுகிறார்கள்.
இதே போல் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தரும் நந்தீஸ்வரர் அருள்புரியும் சிவன் கோவில்கள் மிகவும் போற்றப்படுகின்றன.
சிவராத்திரியின் போதும் பிரதோஷ காலத்தின் போதும் இறைவனுடன் அங்கு அருள்பாலிக்கும் நந்தீஸ்வரரையும் வழிபட்டால் வாழ்வில் வசந்தம் வீசும் என்பர்.
