தஞ்சாவூரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் தனியார் பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் குற்றச்சாட்டு.
பேருந்து புறப்படும் நேரத்தில், ஏற்பட்ட தகராறில் ஒரு பேருந்து மற்றொரு பேருந்தை பின்னால் வந்து இடிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவுகிறது.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பட்டுக்கோட்டை செல்வதற்காக இரண்டு தனியார் பேருந்துகள் தயார் நிலையில் இருந்துள்ளது.
இந்நிலையில் எந்த பேருந்து முன்னே புறப்பட வேண்டும் என்பதில் இரண்டு ஓட்டுநர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த ஒரு தனியார் பேருந்தின் ஓட்டுனர், பின்னால் இருந்த மற்றொரு தனியார் பேருந்து மீது வேகமாக மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இதில் ஒரு பேருந்தின் பின்பக்க கண்ணாடி முற்றிலும் உடைந்து உள்ளது. இந்த காட்சிகள் அங்கு இருந்த பொதுமக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டனர்.
தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி இருக்கிறது. இரண்டு தனியார் பேருந்து உரிமையாளர்களும் சமூகமாக பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில் வழக்கு ஏதும் பதியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்களையும், பயணிகளையும் அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.