தஞ்சை ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.

தமிழகத்தின் சென்னை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆர்த்தி ஸ்கேன் சென்டர் மையங்கள் இயங்கி வருகின்றன. இதேப்போல் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் ஆர்த்தி ஸ்கேன் சென்டர் இயங்குகிறது.
இந்நிலையில் இந்நிறுவனம் சரியான முறையில் வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது. மேலும் இதுதொடர்பாக வருமானவரித்துறையினருக்கும் புகார்கள் சென்றன.

அதன் அடிப்படையில் இன்று காலை தஞ்சை புதுக்கோட்டை சாலை மணி மண்டபம் அருகே உள்ள ஆர்த்தி ஸ்கேன் சென்டரில் 5 பேர் குழு கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்தனர். பின்னர் வெளிப்புற கதவை அடைத்து சோதனையை தொடர்ந்தனர்.
அவசர தேவைக்காக ஸ்கேன் செய்ய வந்த பொதுமக்களுக்கு ஸ்கேன் செய்ய அறிவுறுத்தினர். மற்றப்படி ஸ்கேன் செய்ய வந்தவர்களை சோதனை முடிந்த பிறகு வருமாறு கூறி அனுப்பினர்.

இதையடுத்து சென்டரில் வருமான வரி கணக்குகள் தினமும் எவ்வளவு வருமானம் வந்துள்ளது, செலவு செய்யப்பட்டுள்ளது. போன்ற விவரங்கள் முறையாக கணக்கில் கொண்டு வரப்பட்டுள்ளதா? என்பது பற்றி பணிபுரியும் டாக்டர்கள், ஊழியர்களிடம் விசாரணை நடத்துகின்றனர். தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
