தஞ்சை மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தவும், அரசே விலை நிர்ணயம் செய்து பொதுமக்களுக்கு வழங்க வலியுறுத்தி ஏஐடியூசி கண்டன ஆர்ப்பாட்டம்.

தஞ்சை மாவட்டத்தில் முக்கிய ஆறான காவிரி ஆறு பல கிளை ஆறுகளாக பிரிந்து, காவிரி டெல்டாவின் பல மாவட்டங்களுக்கு மிகுந்த பாசன வசதியாக விளங்குகின்றது. காவிரி ஆறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் அரசின் விதிமுறைகளை மீறி மணல் கொள்ளையடிப்பதன் மூலம் ஆற்றின் வளம், மண்வளம் பாதிக்கப்படுவதுடன், இயற்கை வளமும் பாதிக்கப்படுகிறது. நாளடைவில் ஆறுகள் வறண்டு வளம் இழக்கும் அபாயம் உள்ளது.
லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் தேவைகளுக்கு பயன்படுகின்ற ஆறுகளை பாதுகாக்கவும், மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தவும் வலியுறுத்தி ஏஐடியூசி சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர் ரயிலடி முன்பு நடைபெற்றது.ஏஐடியூசி மாவட்ட செயலாளர் தில்லைவனம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் சோழ மன்னன் கரிகாலன் கட்டிய 2000 ம் வருடத்திற்கு மேலான சிறப்பு வாய்ந்த கல்லணையை சுற்றி பத்து கிலோமீட்டர் அளவுக்கு மணல் எடுப்பதை தடை செய்ய வேண்டும்.
விதிமுறைகளை மீறி நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மணல் எடுப்பதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் இயற்கை வளம், மண்வளம் பாதிக்கப்பட்டு அழிவை நோக்கி செல்லும் அபாயத்தை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், ஆன்லைன் மூலம் மணல் விற்பனை செய்வதை மீண்டும் முழுமையாக அமல்படுத்த வேண்டும், ஆன்லைன் முறையை தனியாருக்கு அனுமதிப்பதை ரத்து செய்ய வேண்டும், மணல் விலையை அரசே நிர்ணயம் செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்,
இடைக்கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும், வெளிமாநிலங்களுக்கு மணல் கடத்துவது தடை செய்வதோடு, வெளிமாவட்டங்களுக்கு மணல் கொண்டு செல்வது முறைப்படுத்த வேண்டும், மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தவும், மணல் விற்பனையை முறையாக செய்யவும் கண்காணிப்பு குழு அமைத்து விதிமுறைப்படி மணல் எடுப்பது உறுதி செய்ய தமிழ்நாடு அரசும், தஞ்சை மாவட்ட நிர்வாகமும் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.