தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்!

வேலூர் சத்துவாச்சாரி, வள்ளலார், பகுதி 3, பூங்கா நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்க அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
மாநில கௌரவத் தலைவர் சி. ராஜவேலு முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் தி.கா.ரமேஷ் தலைமை வகித்தார். இதில் மாநில கௌரவ ஆலோசகர் ஜோதி ராமலிங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தாண்டவ மூர்த்தி, பாலகிருஷ்ணன், முனுசாமி,முத்துசாமி, மனோகரன், ஏ. மணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மதன்குமார் வரவேற்றார். பின்னர் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் மத்திய அரசு பணியாளர்களுக்கு 1.1. 2026 முதல் 8 வது ஊதியக்குழு அமைத்து அதன் பலன்களை பணியாளர்களுக்கு வழங்க உள்ளது. அதுபோல தமிழக அரசும் உடனடியாக 8வது ஊதியக்குழு அமைத்து 1.1.2026 முதல் பணியாளர்களுக்கு பலன்களை வழங்க தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களை இந்த செயற்குழு வேண்டுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு துறைகளில் காலி பணியிடங்கள் நிரப்புவது இல்லை. அதற்கு பதிலாக ஒப்பந்த அடிப்படையில் அல்லது தினக்கூலி அடிப்படையில் பதவிகள் நிரப்பப்படுகிறது. அந்த பதவிகளை நிரப்புவதற்கு நிரந்தர பணியாளர்களை நியமிக்க தமிழக அரசை இந்த செயற்குழு வேண்டுகிறது.
தமிழக அரசு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. அகவிலைப் படியும் மத்திய அரசு வழங்கும் தேதியில் தமிழக அரசு வழங்குவதில்லை. இதை உடனடியாக வழங்க தமிழக அரசை இந்த செயற்குழு வேண்டுகிறது.
மாவட்டத்திலுள்ள பேரூராட்சி தினக்கூலி பணியாளர்களுக்கு வேலூர் மாவட்டத்தில் ரூபாய் 500 தினக்கூலி வழங்கப்படுகிறது. இதே போல அனைத்து பேரூராட்சிகளிலும் வழங்க தமிழக அரசை இந்த செயற்குழு வேண்டி கேட்டுக்கொள்கிறது.
தோட்டக்கலைத் துறையில் பணி நிரந்தரம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு ஓய்வூதியம், பணிக்கொடை மற்றும் பதவி உயர்வு வழங்க தமிழக அரசை இந்த செயற்குழு வேண்டுகிறது. அரசு தோட்டக்கலை பண்ணைகளில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களுக்கு தினக்கூலி உயர்வு மற்றும் பணி நிரந்தரம் வழங்க தமிழக அரசை இந்த செயற்குழு வேண்டி கேட்டுக்கொள்கிறது.
தமிழக அரசு பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள சலுகைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த எந்த சங்கத்தையும் அழைத்துப் பேசவில்லை. இனியாவது அனைத்து சங்கங்களையும் அழைத்து பேசி ஒரு சில சலுகைகளையாவது உடனடியாக வழங்க தமிழக அரசை இந்த செயற்குழு வேண்டுகிறது.
இவ்வாறு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக மாவட்டத் துணைத் தலைவர் ஜெயபால் நன்றி கூறினார்.