தலைப்பு செய்திகள்
உக்ரைனின் லுகான்ஸ்க் பகுதியில் உள்ள 2 நகரங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய அறிவிப்பு.
உக்ரைனின் கிழக்கில் உள்ள லுகான்ஸ்க் பகுதியில் 2 நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக ரஷ்ய ஆதரவு உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். உக்ரைனில் ரஷ்யா கொத்துக்குண்டுகளை பொழிந்து வருவதை பயன்படுத்தி 2 நகரங்களை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். உக்ரைனை மூன்று திசைகளில் இருந்து சுற்றிவளைத்து ரஷ்ய ராணுவம் தாக்கி வருகிறது. கருங்கடல் பகுதியில் இருந்து போர்க்கப்பல்கள் மூலமாக உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. பெலாரஸ் நாட்டின் எல்லை பகுதிகளில் இருந்தும் அதிநவீன ஏவுகணைகளை வீசி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
உக்ரைனின் கிழக்கு பகுதியில் இருந்து விமானப்படை மூலம் குண்டுகள் பொழிந்து வருகின்றன. ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸில் இருந்து உக்ரைனின் வடக்கு நகரங்கள் மீது ரஷ்ய விமானப்படை குண்டு மழை பொழிகிறது. தாக்குதலுக்குள்ளான உக்ரைனில் 100க்கும் மேற்பட்ட தமிழக மருத்துவ மாணவர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். உக்ரைன் தலைநகர் கீவில் மட்டும் கொடைக்கானலை சேர்ந்த மாணவி உள்பட 100க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர்.
ரஷ்யாவின் தாக்குதலில் நூற்றுக்கணக்கான தங்கள் நாட்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உக்ரைனின் கிழக்கில் உள்ள லுகான்ஸ்க் பகுதியில் 2 நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். லுகான்ஸ்க் நகரில் ரஷ்யாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் அதிகம் பேர் வசிப்பதால் பிரிவினைக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ் நகருக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என்று வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.