தலைப்பு செய்திகள்
சர்வதேச கால்பந்து போட்டி, உலக ரக்பி போட்டி, ஐஸ் ஹாக்கி போட்டிகளில் பங்கேற்க ரஷியாவுக்கு தடை!!
லண்டன் உக்ரைன் மீதான தாக்குதலை கண்டித்து மேற்கு நாடுகள் ரஷியா மீதான தடைகளை அதிகரித்து கொண்டே செல்கின்றன. 6வது நாளாக உக்ரைன் மீது ரஷியா படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய கனடா அரசு தடை விதித்துள்ளது. கனடா தலைநகர் ஓட்டாவில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, டேங்கர் முறிப்பு ஆயுதங்கள் , ராக்கெட்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை மிக விரைவில் அனுப்பி வைப்போம் என்றார்.ஐரோப்பிய ஒன்றியத்தில் ரஷ்ய ஊடகங்களில் செயல்பாடுகளை பேஸ்புக் நிறுவனம் கட்டுப்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், உக்ரைனுடன் ரஷ்யா போரில் ஈடுபட்டு இருப்பதால் விளையாட்டு உலகமும் பெரிதாக பாதித்துள்ளது. உலக கோப்பை கால்பந்து போட்டியில் ரஷ்யாவுடன் விளையாட மாட்டோம் என்று போலந்து அறிவித்துவிட்டது. பிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியில் ரஷ்யா பெயர், கொடி பயன்படுத்த பிஃபா தடை விதித்துள்ளது.
ரஷ்ய அணிகள் மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து சர்வதேச கால்பந்து தொடர்களில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஃபிபா தற்போது அறிவித்துள்ளது.ரஷிய கிளப் அணிகள் விளையாட ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு தடை விதித்துள்ளது.உலக ரக்பி போட்டிகளில் மறு அறிவிப்பு வரும்வரை ரஷ்யா மற்றும் பெலராஸ் பங்கேற்க தடை விதித்து உலக ரக்பி நிர்வாகக் குழு அறிவித்துள்ளது. மேலும் ஐஸ் ஹாக்கி விளையாட்டு போட்டியை நடத்தும் உரிமையை ரஷியாவிடம் இருந்து பறித்தது சர்வதேச ஐஸ் ஹாக்கி கூட்டமைப்பு.
அது மட்டுமின்றி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, ‘ரஷ்யா, பெலாரஸ் நாடுகளில் நடைபெற இருக்கும் அனைத்து விளையாட்டு போட்டிகளையும் ரத்து செய்ய வேண்டும்’ என்று விளையாட்டு சங்கங்களை கேட்டுக் கொண்டுள்ளது.அரசியல், பொருளாதாரம், விளையாட்டு என பல வழிகளிலும் மேற்கு நாடுகள் ரஷியாவுக்கு நெருக்கடி கொடுத்தாலும் உக்ரைன் மீதான தாக்குதலில் இருந்து இதுவரை ரஷியா பின்வாங்கவில்லை.