`திமுகவிற்கு சரியான எதிரி நாங்கள் தான்’- ஆர்ப்பாட்டத்தில் பாஜகவுக்கு நினைவூட்டிய செல்லூர் ராஜூ.

“திமுகவிற்கு சரியான எதிரி நாங்கள் தான். திமுகவிற்கு அடுத்து நாங்கள் தான் எனக் கூறுபவர்களுக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஒரு பாடமாக இருக்கும்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூகூறினார்.

மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், அறிவிப்பைத் திரும்பப் பெற கோரியும், அதிமுக சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக மதுரை முனிச்சாலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து கொண்டு, மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, ஆவின் பொருட்கள் விலை உயர்வைக் கண்டிக்கும் வகையில் பதாகைகளை ஏந்தி, திமுக மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

