திருச்சி அருகே அரசு பேருந்து மோதி 4 வயது சிறுமி பலி – தப்பிஓடிய ஓட்டுநர், நடத்துனர் இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றன.

திருச்சி மாவட்டம்,
மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே பழையபாளையத்தில் வசித்து வரும் நாடக நடிகர் பழனி(29). இவருக்கு சாந்தினி என்ற மனைவியும் 4 வயது தேவதர்ஷினி என்ற மகளும் உள்ளனர். பழனி தனது வேலைக்கு புறப்படும் வேளையில் தனது மகள் தேவதர்ஷினியை காரில் ஏற்றிக்கொண்டு ஒரு சுற்று வந்து இறக்கி விடுவது வழக்கமாம். வழக்கம்போல் வெள்ளிக்கிழமை இரவு காரில் தனது மகளை ஏற்றி சென்றுவிட்டு பின் மீண்டும் வீட்டின் அருகே தேவதர்ஷினியை இறக்கிவிட்டுள்ளார். காரிலிருந்து இறங்கிய தேவதர்ஷினி வீட்டின் வாசலுக்கு விளையாட ஓடியுள்ளார்.

அதுசமயம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திலிருந்து துவரங்குறிச்சி நோக்கி சென்ற அரசு நகர பேருந்து எதிர்பாராத நிலையில் சிறுமி தேவதர்ஷினி மீது மோதியது. இந்த விபத்தில் தலைநசுங்கி நிகழ்விடத்திலேயே தேவதர்ஷினி உயிரிழந்தார். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற காவல்துறையினர் தேவதர்ஷினி உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தப்பி ஓடிய பேருந்து ஓட்டுனரான மருங்காபுரி சொக்கநாதபட்டி சின்னதம்பி மகன் பால்ராஜ்(49) மற்றும் நடத்துனரான வையம்பட்டி செக்கணம் அர்ஜுனன் மகன் இளையராஜா(42) ஆகியோர் மீது விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவான இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
