திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் செல்பி ஸ்டிக்கில் மறைத்து கடத்தி விடப்பட்ட 28 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சர்வதேச நாடுகளில் இருந்து திருச்சிக்கு குருவிகள் மூலம் தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் அதிக அளவில் கடத்தி வரப்படுகின்றன. இதனை தடுக்க திருச்சி விமான நிலையத்தில் விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த அதிகாரிகளின் கண்ணில் சிக்காமல் இருக்க கடத்தல்காரர்கள் பல்வேறு நூதன வழிகளில் தங்கத்தை கடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை துபாயில் இருந்து இண்டிகோ விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர். இதில் ஆண் பயணி ஒருவர் மீதான சந்தேகத்தின் அடிப்படையில் அவரையும், அவர் கொண்டு வந்த உடமைகளையும் நவீன ஸ்கேனர் கருவி மூலம் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர்.
அப்போது அவர் எடுத்து வந்த மொபைல் போன் செல்பி ஸ்டிக்கில் மறைத்து கடத்தி வந்த ரூ.27 லட்சத்து 98 ஆயிரத்து 189 மதிப்புள்ள 53 கிராம் பிடிபட்டது. பின்னர் அதிகாரிகள் துபாயில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்து அந்த பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
