திருச்சி சிறப்புமுகாமில் ஈழத்தமிழர் விடுதலை செய்ய வலியுறுத்தி தீக்குளித்து தற்கொலை முயற்சி – அதிகாரிகள் பேச்சு வார்த்தை.

திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை, நைஜீரியா , இந்தோனேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த குற்ற செயலில் ஈடுபட்ட மற்றும் பாஸ்போர்ட் வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் உள்ளனர். இலங்கையைச் சேர்ந்த 108 பேர் உள்ளனர்.

இவர்கள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த மாதம் 20ம்தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் 8க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிப்பு காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் முகாமுக்கு வரவழைக்கப்பட்டனர்.
தொடர்ந்து அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்து ஈழத் தமிழர்களில் ஒருவரான உமாரமணன் என்பவர் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தீ குளித்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர் மேலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 4 பேர் மரத்தில் தூக்கு கயிறு கட்டி தூக்கில் தொங்க தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
