திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளராக கலந்து கொண்ட வாலிபர் மாடு முட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரில் ஆண்டு தோறும் மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இன்று பெரிய சூரியூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியானது காலை 7.45 மணிக்கு துவங்கியது.
இந்த போட்டியை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் துவக்கி வைத்தார்.
முதலில் கோவில் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 3 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் 400 மாடுகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளது.
இதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், மாட்டின் உரிமையாளர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் பார்வையாளராக இருந்த புதுக்கோட்டை மாவட்டம் களமாவூரை சேர்ந்த அரவிந்த் (25) என்ற வாலிபர் மாடு முட்டியதில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
முதற்கட்ட சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அரவிந்த் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவமானது ஜல்லிக்கட்டு போட்டி பார்வையாளர்களிடயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்து தராமல் இருப்பதால் தான் இது போன்ற சம்பவம் நடந்திருப்பதாக பார்வையாளர்கள் மத்தியில் குற்றச்சாட்டாக உள்ளது.