திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா.
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள திருச்சி அரசு கலைக் கல்லூரி என்.எஸ்.எஸ் மாணவ மாணவிகளுக்கான சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்க தலைவரும், சாலை பாதுகாப்பு குழு உறுப்பினருமான கோவிந்தராஜ் விழாவுக்கு தலைமை வகித்து பேசியதாவது குடி போதையிலும், செல்போன் பேசிக்கொண்டும், அதிவேகமாகவும் வாகனம் ஓட்டக்கூடாது.
இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். மருத்துவமனை, பள்ளி கல்லூரிகள் உள்ள இடங்களில் ஹாரன் ஒலியை எழுப்பக் கூடாது.
சாலை விதிகளை மீறுவது, ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், அதிவேகமாகவும், ஹெல்மெட் அணியாமல் செல்வது, 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டியை ஓட்டுவது உள்ளிட்டவை குற்றங்களாகும்.
இதற்கு குறைந்தபட்சம் ரூ.500 முதல் 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் மூன்று வருடம் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
பாதசாரிகள் சாலை விதிகளை பின்பற்றி இடது புறமாக செல்ல வேண்டும். சாலையை கடக்கும்போது சிக்னல் பார்த்து கடப்பதுடன் இருபுறமும் பார்த்து கடக்க வேண்டும். இதனை வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பின்பற்ற வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் அரசு கலைக் கல்லூரி முதல்வர் மேரிலீமா ரோஸ், வரலாற்று துறை தலைவர் அர்ஜுனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் பால்குணா லோகநாத் வாழ்த்துரை வழங்கினார்.
சாலை பாதுகாப்பு ஆய்வாளர்கள் வெங்கடேசன், ரத்தினம், திருவெறும்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டனர்.
முன்னதாக என்.எஸ்.எஸ் அலுவலர் அருள் அனைவரையும் வரவேற்றார். என்.எஸ்.எஸ் அலுவலர் கருப்பண்ணன் நன்றி கூறினார். இந்த விழாவில் சாலை பாதுகாப்பு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டு, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.