தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சி பட்டறை கடந்த 8-ம் தேதி தொடங்கி 4 நாட்கள் நடைபெற்றது.

இறுதிநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் பேசும்போது:
மதுரை ஆதீனம் விபத்தினால் பதவிக்கு வந்தவர். அவருக்கு இந்து சமய அறநிலையத்துறையின் வரலாறும் தெரியாது. மதுரை ஆதீனத்தின் மரியாதையை காப்பாற்றியதே திராவிடர் இயக்கம்தான். சூத்திரர்கள் ஒருபோது சந்நியாகி ஆகக் கூடாது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பே உள்ளது. இவர்கள் தங்களை துறவிகள் என்று சொல்வது அர்த்தமே இல்லை. இவர்களை துறவிகளாக இந்து சட்டம் அங்கீகரிக்கவே இல்லை.
நித்யானந்தாவிடம் சிக்கி மதுரை ஆதீனம் என்ன பாடுபட்டது என்பதை நினைவுபடுத்திக்கொண்டால் அவரது நாக்கு தானாக உள்ளே சென்றுவிடும்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பு முதலில் விலைவாசி பட்டியலை பார்க்க வேண்டும். ஒவ்வொருக்கும் 15 லட்சம் ரூபாய் கொடுத்தார்களா?, சப்கா சாத் சப்கா விகாஸ் திட்டத்தில் என்னென்ன செய்தார்கள் என்பதை சொல்லட்டும் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுத்தார்களா என்பதை முதலில் சொல்லட்டும். அதன் பின்னர் ஊழல் பிரச்சினைக்கு வரட்டும். அப்புறம் தமிழகத்தில் காலூன்றுவதைப் பற்றி யோசிக்கட்டும்.
தமிழகத்தில் காலூன்ற பாஜக ஆசைப்படுவது தவறல்ல. அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னதை தவறாக புரிந்துகொண்டுள்ளார்கள். இவர்கள் பகலிலேயே கனவு கண்டுகொண்டு இருக்கிறார்கள்.
