தொடர் ஆலங்கட்டி மழையால் 200 வீடுகள், 10000 நெல்மூட்டைகள் , விளைநிலங்கள் நாசம்!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் உள்ள வீடுகள், மா மற்றும் தென்னந்தோப்புகள், முருங்கை மரங்கள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த சந்தம்பட்டி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் பலமாக பெய்தது. இவற்றில் குறிப்பிடத்தக்கது என்ன வென்றால், மழை என்றால் சாதாரணம மழை அல்ல. ஆலங்கட்டி மழை.இதனால் சந்தம்பட்டி கிராமத்தில் வடிவேல், மல்லிகா, மாதப்பன் ஆகியோரின் வீடு சிமென்ட் ஓட்டால் ஆனது. அங்கு வீசிய பலத்த சூறாவளி காற்றால் சிமெண்ட் ஓடு தூக்கி வீசப்பட்டது. இதில் மாதப்பன் வீட்டில் சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகி பெரும் இழப்பை ஏற்படுத்தியது.
2 ஏக்கரில் மா மரங்களை நடவு செய்திருந்த முல்லைவேலின் தோப்பும் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது. ராஜேந்திரன் என்பவரது 2 ஏக்கர் விவசாய நிலத்தில் இருந்த முருங்கை மரங்கள் சூறாவளி காற்றை தாக்குப் பிடிக்க முடியாமல் முற்றிலும் உடைந்து சேதமானது.மேலும் காற்றை எதிர்த்து தாங்கக்கூடிய தென்னை மரங்களும் சேமடைந்ததுதான் பெரிய அதிசயம். அந்த கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளன. இதனால் அந்த கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
பலத்த சூறாவளி காற்று காரணமாக 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மின்சாரம் இன்றி அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே மின்சார கம்பங்களை சீர் செய்யவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை உடனே வழங்கிட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.சூறாவளி காற்று மழை ஆலங்கட்டி மழை காரணமாக குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினும் கவலையும், நஷ்டத்தையும் சந்தித்துள்ளதால் அப்பகுதியில் பெரும் சோகம் நிலவுகிறது.