தொடர்ந்து 5 மணி நேரம் ஸ்கேட்டிங்!! 3 வயது தமிழக சிறுமி உலக சாதனை!!!

தொடர்ந்து 5 மணி நேரம் ஸ்கேட்டிங் செய்த கரூரைச் சேர்ந்த 3 வயது சிறுமி உலக சாதனை படைத்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.கரூரைச் சேர்ந்தவர் கருப்பையா. இரவு மனைவி லதா. இந்த தம்பதிக்கு மாதங்கி ஸ்ரீ என்ற 3 வயது மகள் இருக்கிறாள். பிஞ்சுக் குழந்தையாக கையை பிடித்து நடக்க வேண்டிய வயதில், இவர் ஸ்கேட்டிங்கில் சிறந்து விளங்கி வருகிறார் என்றால் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம்தான்.

இளம்வயதிலேயே மாதங்கி ஸ்ரீக்கு ஸ்கேட்டிங் மீது ஆர்வம் இருந்ததைக் கண்டு வியந்த சிறுமியின் பெற்றோர், அவரை ஸ்கேட்டிங் பயிற்சியில் சேர்த்துவிட்டனர். வகுப்பில் அவர் சிறந்த முறையில் ஸ்கேட்டிங் செய்ததைப் பார்த்த சிறுமியின் பெற்றோர் ஸ்கேட்டிங்கில் தங்களது மகள் மாதங்கிஸ்ரீ உலக சாதனை புரிய வேண்டும் என்று விரும்பினார்கள்.முதல்முறையாக கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள தனியார் விளையாட்டு மைதானத்தில் மாதங்கிஸ்ரீ கடந்த 1 மாதத்திற்கு முன்பு 1 மணி நேரம் இடைவிடாமல் ஸ்கேட்டிங் செய்து முதல் இளம் வயது சிறுமி என்கிற உலக சாதனையை மாதங்கிஸ்ரீ படைத்து இருந்தார்.
இந்நிலையில் 365 சுற்றுகளை, 26.5 கி.மீட்டர் தூரத்தை இடைவிடாமல் தொடர்ந்து 5 மணிநேரம் ஸ்கேட்டிங் செய்து 3 வயதான சிறுமி மாதங்கிஸ்ரீ உலக சாதனை படைத்துள்ளார். சிறுமியின் சாதனை அங்கீகரித்து இந்த உலக சாதனையை நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனத்தின் இந்தியா சிஇஓ, அரவிந்த், தேசிய தொழில்நுட்ப இயக்குனர் மற்றும் தேசிய நடுவர்கள் லாவண்யா, ரஞ்சித் ஆகியோர் சான்றிதழை வழங்கி கவுரவித்தனர்.
இளம் வயதில் பெற்றோரின் கைகளை பிடித்துக் கொண்டும் இடுப்பில் தொற்றிக் கொண்டும், கழுத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டும் செல்லவே குழந்தைகள் ஆசைப்படுவார்கள். அதிலும் பெரியவர்களை தரையில் முட்டிபோட வைத்து யானை சவாரி, குதிரை சவாரி என்று பெரியவர்கள் குழந்தைகளை செல்லம் கொஞ்சி மகிழ்வார்கள். இதைத்தான் நாம் காலம் காலமாக பார்த்து வருகிறோம். ஆனால் 3 வயதேயான சிறுமி 5 மணிநேரம் தொடர்ந்து ஸ்கேட்டிங் செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்று இந்தியாவையும், தமிழ்நாட்டையும் பெருமைப்பட வைத்துள்ளார். வளர்ந்து வரும் தலைமுறைக்கு இவர் நல்ல ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறார். இவரை பெற்றவர்களும், கரூர் மக்களும் மாதங்கிஸ்ரீயை நினைத்து பூரித்து போகிறார்கள்.
