பழைய கூடலூரில் கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே பழையகூடலூரில் அரசு பொது தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் “உன்னால் முடியும்” என்ற புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.
பழைய கூடலூர் ஊராட்சி மன்றத் தலைவர் இரா.பாண்டியன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஜீவாராணி நாகூரான், உஷா செல்வராஜ், ராமநாதன், சாந்தகுமாரி இளங்கோவன், செந்தமிழ்செல்வி பாலு, ஓய்வு பெற்ற அலுவலர்கள் ராஜேந்திரன், மரிய அந்துவான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் சிரஞ்சீவி வரவேற்புரையாற்றினார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
ஸ்ரீகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மதிவாணன், ஆசிரியர்கள் சபாபதி, சங்கீதா, கதிரவன், சோனைராஜ், ராஜ் வித்யாலயா பள்ளி துணை முதல்வர் இளையராஜன், கலைமகள் கல்வியியல் கல்லூரி முதல்வர் கோவிந்தராஜன், மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் அகஸ்டின் விஜய் ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு தேர்வை பயமின்றி எதிர்கொள்ளுதல், அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான வழிமுறைகள், வாழ்வில் வெற்றி பெறுவதற்கான யுக்திகள் குறித்து பயிற்சி அளித்தனர்.
இதில், கிராமப்புற பகுதிகளிலிருந்து பல்வேறு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்றத் தலைவர் இரா.பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர். ஊராட்சி மன்ற மக்கள் நல பணியாளர் உஷா நன்றி கூறினார்.