BREAKING NEWS

பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது.  இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு.

பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது.  இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு.

 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் புதிதாக கட்டப்பட உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகத்திற்காக பூமிபூஜை விழாவில் அந்த கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசரன் கலந்து கொண்டார். புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டிய முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

 

பாரதீய ஜனதா கட்சி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கரணமாக செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட பாரத பிரதமர் அடிக்கல் நாட்டி பல ஆண்டுகள் ஆன பின்னரும் அதற்கான எந்த பணிகளும் நடைபெறவில்லை.

 

இதே காலத்தில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிபுரியும் மாநிலங்களில் எய்மஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு தற்போது மருத்துவமனை பயன்பாட்டில் உள்ளது.

 

 

இப்படி தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களை புறக்கணிக்கும் போக்கையும், ஆளுநர்களை கொண்டு இடையூறு செய்யும் பணிகளையும் பாரதீய ஜனதா கட்சி செய்து வருகிறது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் கண்ணுக்கு எட்டிய தூரம் எதிரிகள் யாரும் தெரியவில்லை.

 

இந்த தேர்தலில் நாங்கள் பெறும் வெற்றி என்பது, பாரதீய ஜனதா கட்சியின் கொள்கைக்கும், அந்த கொள்கையை ஆதரிக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் தக்க பாடம் புகட்டுவதாக இருக்கும்.

 

கலைஞரை நினைவுபடுத்தும் விதமாக மெரினா கடற்கரையில் பேனா வைக்கும் திட்டத்தினை எதிர்க்கும் சீமான், பல்லாயிரம் கோடி மக்கள் பணத்தில் வல்லபாய் பட்டேல் சிலை வைப்பதை பற்றி ஏன் வாய் திறக்க மறுக்கிறார்—?

 

நம்நாட்டில் இதுவரையில் பிரதமராக இருந்த அனைவரும் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி இருந்தார்கள். ஆனால் மோடி பிரதரமாக இருந்த கடந்த 9 ஆண்டுகளில் 23 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்துள்ளார்.

 

தற்போது எல்.ஐ.சி நிறுவனத்தின் சொத்துக்களை அதானி நிறுவத்தில் முதலீடு செய்வதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட போகிறது. பாரத பிரதமர் மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றாமல் தனது நண்பர்களான அதானி, அம்பானிகளுக்கான வளர்ச்சி திட்டங்களையே. நிறைவேற்றி வருகிறார் இவ்வாறு முத்தரசன் கூறினார்.

CATEGORIES
TAGS