BREAKING NEWS

பொதுமக்கள் குடியிருக்கும் நிலங்களை கோவில் நிலங்கள் என அறிவித்ததை திரும்ப பெற வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

பொதுமக்கள் குடியிருக்கும் நிலங்களை கோவில் நிலங்கள் என அறிவித்ததை திரும்ப பெற வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பயணிகள் விடுதியில் நேற்று மாலை புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளரிடம் கூறியதாவது:-

கடந்த சில நாட்களாக சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் தொகுதிக்குட்பட்ட தேவேந்திர குல வேளாளர் சமூகம் வசிக்கக்கூடிய கிராமங்களில் நேரில் சென்று ஆய்வு செய்தேன்.

அந்தப் பகுதிகளில் குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. தாருகாபுரம் கிராமத்தில் ஒரு மாதத்திற்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

அந்த பகுதி மக்களை சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் சந்திக்கவில்லை. ஆனால் அந்த பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள். அப்படி எதுவும் நடைபெறவில்லை.

வாசுதேவநல்லூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் உள்ள கோவிலில் மக்கள் வழிபாடு செய்ய அனுமதி மறுக்கிறார்கள்.

சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு அரசு உரிய மரியாதை செலுத்த வேண்டும். சுதந்திரப் போராட்ட வீரர் வெண்ணி காலாடிக்கு அவர் பிறந்த கிராமத்தில் மணிமண்டபம் அமைத்திருக்கிறார்கள்.

அந்த மணிமண்டபத்திற்கு உள்ளூர் மக்களுக்கு மட்டும்தான் அனுமதி கொடுத்து இருக்கிறார்கள்.

வெண்ணிகாலாடியில் பிறந்த தினமான டிசம்பர் 20ஆம் தேதி புதிய தமிழகம் கட்சியினர் அங்கு சென்று உரிய மரியாதை செலுத்துவார்கள்.

தேவநேயப் பாவாணரின் சொந்த ஊரான
கோமதிமுத்து புரத்தில் அரசு தேவநேயப் பாவாணருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்.

மேலும் சங்கரன்கோவில், நெல்லை, சென்னை உள்ளிட்ட இடங்களிலும் மணிமண்டபம் கட்டலாம்.

சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பல கிராமங்களில் திருக்கோவில் நிர்வாகம் கோவிலுக்கு சொந்தமான இடம் என்று கூறி கிராம மக்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

திருக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் வணிக பயன்பாட்டிற்கும், விவசாய பணிகளுக்கும் பயன்பெற்று வருகின்றன. இதில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் குடும்பங்கள் அங்கு வசித்து வருகின்றனர்.

அவர்களுக்கு திருக்கோயிலில் நிர்வாகம் எந்தவித ஆதாரமும் இல்லாமல்
நோட்டீஸ் அனுப்பியது வன்மையாக கண்டிக்கிறோம்.

பொதுமக்கள் குடியிருக்கும் நிலங்களை கோவில் நிலங்கள் என அறிவித்ததை திரும்பப் பெற வேண்டும்.
ஜமீன்தார் முறை பல ஆண்டுகளுக்கு முன்பு ஒழிக்கப்பட்டும், சில நிலங்கள் சில ஜமீன்தாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனை அரசு மீட்டு வெள்ளை அறிக்கை விட வேண்டும்.

வருகிற 2026 ஜனவரி மாதம் புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது பற்றி முடிவு எடுக்கப்படும்.

தமிழகத்தில் ஒரு கட்சி ஆட்சி ஒழிந்து கூட்டணி ஆட்சி தான் வரும். அந்தக் கூட்டணி ஆட்சியில் புதிய தமிழகம் மட்டுமல்லாமல் அனைத்து சமுதாயத்தின் பங்களிப்பும் அதில் இருக்கும்.

கடந்த நான் நான்கறை ஆண்டு காலமாக தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சி வெற்று விளம்பர மாடல் ஆட்சி தான். 2026-ல் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சி தான் வரும்.

இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்
அப்போது மாநில துணை அமைப்பாளர் ராஜேந்திரன், தென்காசி கிழக்கு மாவட்ட செயலாளர் ராசையா, வடக்கு மாவட்ட இணை செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

CATEGORIES
TAGS