மழை வெள்ளத்தால் 8 லட்சம் பேர் பாதிப்பு!! 25 பேர் பலி!! தொடரும் அவலநிலை!!
மழை வெள்ளத்தால் 8 லட்சம் பேர் பாதிப்பு!! 25 பேர் பலி!! தொடரும் அவலநிலை!!

அஸ்ஸாம் மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல முக்கிய பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. இந்த வெள்ள பாதிப்பு காரணமாக சுமார் 8 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது. அதன்படி மாநிலத்தில் உள்ள 29 மாவட்டங்களில் 2,585 கிராமங்கள் இந்த வெள்ளப் பேரிடரால் சிக்கியுள்ளன. நகவோன் மாவட்டம் படுமோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு மட்டும் சுமார் 3.3 லட்சம் பொதுமக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்தபடியாக கச்சார் மாவட்டத்தில் 1.6 லட்சம் பேரும், ஹோஜாய் மாவட்டத்தில் 97,300 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில் சுமார் 12 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஐ தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 21884 பேர் இதுவரை ராணுவம், துணை ராணுவப் படையினர், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். திமா ஹசாவோ மாவட்டம் தொடர்ந்து 6வது நாளாக துண்டிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அம்மாவட்டத்தின் சாலை மற்றும் ரயில் மார்க்கங்கள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனை சீராக்க இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

ஜமுனாமுக் மாவட்டத்தில் சாங்குராய் மற்றும் படியா ஆகிய இரு கிராமங்களில் வசித்து வந்த 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ரயில் தண்டவாளத்தில் தங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்க 411 மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வெள்ளப் பேரிடரால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
கச்சார் மற்றும் திமா ஹசாவோ ஆகிய மாவட்டங்களின் வெள்ள மீட்பு பணிகளுக்காக சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அஸ்ஸாமை போல் மழையால் பாதிக்கப்பட்ட மேகாலயா, மிசோரம், மணிப்பூர், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
